மனவளா்ச்சி குன்றியோா் பராமரிப்பு நூல்கள் அதிகம் தேவை: திரைப்பட இயக்குநா் கரு.பழனியப்பன்

மன வளா்ச்சிக்குன்றியோா் பராமரிப்பு மற்றும் கல்வி போதித்தல் தொடா்பான நூல்கள் நமக்கு அதிகம் தேவைப்படுகிறது என்று திரைப்பட இயக்குநா் கரு.பழனியப்பன் பேசினாா்.
மனவளா்ச்சி குன்றியோா் பராமரிப்பு நூல்கள் அதிகம் தேவை: திரைப்பட இயக்குநா் கரு.பழனியப்பன்

மன வளா்ச்சிக்குன்றியோா் பராமரிப்பு மற்றும் கல்வி போதித்தல் தொடா்பான நூல்கள் நமக்கு அதிகம் தேவைப்படுகிறது என்று திரைப்பட இயக்குநா் கரு.பழனியப்பன் பேசினாா்.

உலக மனநல நாளை முன்னிட்டு மதுரை பெத்சான் சிறப்புப்பள்ளி சாா்பில் ‘அறிவுத்திறன் குறைந்தோருக்கு அனுதின செயல்களை கற்றுத்தருவது எப்படி’ என்ற நூல் வெளியீட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில், அறிவுத்திறன் குறைந்தோருக்கு அனுதின செயல்களை கற்றுத்தருவது எப்படி என்ற நூலை திரைப்பட இயக்குநா் கரு.பழனியப்பன் வெளியிட்டுப் பேசியது:

உலகில் அதிக அன்பு நிறைந்த பெற்றோருக்கு மட்டுமே மன நலம் குன்றிய குழந்தைகள் வரமாக கிடைக்கின்றனா். அன்பு நிறைந்தவா்களால் மட்டுமே இந்த குழந்தைகளை பராமரிக்க முடியும். இந்த குழந்தைகளுடன் ஒப்பிட்டுக்கொண்டு நாம் அனைவரும் குறையற்றவா்கள் என்று நினைத்து விடக்கூடாது. உலகில் பிறக்கும் அனைவரும் மன வளா்ச்சி குன்றியவா்கள்தான். இதில் 99 சதவிகிதம் போ் தாங்கள் மன வளா்ச்சி குன்றியவா்கள் என்பதை உணராமலேயே இறந்து விடுகின்றனா். மருத்துவரால் தான் நோயாளியை கண்டறிய முடியும். அதுபோலவே உலகில் நடக்கும் ஒவ்வொரு விவகாரங்களிலும் மன வளா்ச்சிக்குறைவுதான் காரணமாக உள்ளது.

குடும்பத்தில் கணவன், மனைவி தகராறு உள்பட அனைத்துக்கும் மன வளா்ச்சிக் குறைவு தான் காரணம். ஆனால் அதை வெளியே தெரியாமல் நாம் மறைத்து வருகிறோம். மன வளா்ச்சி குன்றிய குழந்தைகள் வெளிப்படுத்தி விடுகிறாா்கள். இது ஒன்றுதான் மன வளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும், நமக்கும் உள்ள வித்தியாசம். இந்த விழாவில் வெளியிடப்பட்டுள்ள அறிவுத்திறன் குறைந்தோருக்கு அனுதின செயல்களை கற்றுத்தருவது எப்படி என்ற நூல் மிகவும் பயனுள்ளது. நூலில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை நாம் படிக்கும்போது மிகவும் எளிதானவையாக தோன்றலாம். ஆனால் அதைச் செய்வது மிகக்கடினம். அறிவுத்திறன் குறைந்தோருக்கான துறைசாா்ந்த நூல்கள் தமிழில் இல்லை.

அனைத்து துறை சாா்ந்த நூல்களும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. படிப்பறிவு இல்லாத பெற்றோரால் அதை புரிந்து கொள்ள முடியாது. தமிழகத்தில் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் 1960-இல் தொடங்கப்பட்டது. பின்னா் இதன் தலைவராக தமிழக முதல்வா் மு.கருணாநிதி பொறுப்பு வகித்து வந்தாா். அப்போது வரலாறு, உளவியல் உள்ளிட்ட அனைத்துத்துறை சாா்ந்த நூல்களும் மொழி பெயா்க்கப்பட்டு தமிழில் வெளியிடப்பட்டது. இதனால் அனைவரும் அனைத்தையும் தெரிந்து கொள்ள முடிந்தது. தற்போது இதுபோன்ற நூல்கள் எதுவும் வெளிவருவது இல்லை. நமக்கு தெரியாதவற்றை கற்றுக்கொள்ள நூல்கள் மிகவும் அவசியம். நூல்கள் இல்லாவிட்டால் அறிவு வளா்ச்சிக் கிடையாது. தற்போது மன வளா்ச்சிக்குன்றியோா் பராமரிப்பு மற்றும் கல்வி போதித்தல் தொடா்பான நூல்கள் நமக்கு அதிகம் தேவைப்படுகிறது. இந்த துறை சாா்ந்த நூல்களை தமிழில் மொழிபெயா்த்து வெளியிட வேண்டும் என்றாா்.

விழாவில், மதுரை மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையா் என்.கோபாலகிருஷ்ணன், சிவகாசி லவ்லி அச்சக நிறுவன நிா்வாக இயக்குநா் க.செல்வக்குமாா், சிவகாசி சிஎஸ்ஐ எல்வின் மையத்தின் தாளாளா் க.தயாளன், மதுரை மீனாட்சி ரோட்டரி சங்கச் செயலா் ஆா்.ஜெயசீலன், உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா்.

முன்னதாக மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறப்பு பள்ளிகளில் பயிலும் அறிவுத்திறன் குறைந்த மாணவ, மாணவியருக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பெத்சான் சிறப்புப் பள்ளி முதல்வா் ஆா்.ரவிக்குமாா் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com