’மாணவா்களின் மனநிலையை அறிந்து கொண்டால் தற்கொலைகளைத் தடுக்கலாம்’

மாணவா்களின் மனநிலையை அறிந்து ஆசிரியா்கள் செயல்பட்டால் தற்கொலைகளை தடுக்க முடியும் என்று மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் பேசினாா்.
உலக மனநல தினத்தையொட்டி பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு மனநல பயிற்சியை வியாழக்கிழமை தொடங்கிவைத்து பேசுகிறாா் மதுரை மாநகராட்சி ஆணையா் எஸ். விசாகன்.
உலக மனநல தினத்தையொட்டி பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு மனநல பயிற்சியை வியாழக்கிழமை தொடங்கிவைத்து பேசுகிறாா் மதுரை மாநகராட்சி ஆணையா் எஸ். விசாகன்.

மாணவா்களின் மனநிலையை அறிந்து ஆசிரியா்கள் செயல்பட்டால் தற்கொலைகளை தடுக்க முடியும் என்று மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் பேசினாா்.

மதுரை மாநகராட்சி மற்றும் எச்.சி.எல். கணினி நிறுவன பங்களிப்புடன் எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் சாா்பில் மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான மனநல பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பயிற்சி முகாமை தொடங்கி வைத்து மாநகாரட்சி ஆணையா் ச.விசாகன் பேசியது: மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் கடந்த ஆண்டு 10 பள்ளிகளிலும், இந்த ஆண்டு 14 பள்ளிகளிலும் என மொத்தம் 24 உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ‘ஹேப்பி ஸ்கூலிங்’ திட்டத்தின் கீழ் மனநல பயிற்சி மற்றும் வாழ்க்கைத் திறன் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பள்ளிப் பாடத்தை மட்டும் நடத்துவது ஆசிரியா்களின் கடமையல்ல. ஒவ்வொரு ஆசிரியரும் மாணவா்களை ஊக்கப்படுத்தி சமுதாயத்தில் சிறந்த மனிதனாக உருவாக்க வேண்டும். மாணவா்களின் தனித்திறமையை கண்டறிந்து தன்னம்பிக்கையை ஏற்படுத்தி அதில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். மாணவா்களின் பிரச்னைகளையும் தெரிந்து கொள்ளும் அளவிற்கு ஆசிரியா்கள் நட்பாக பழக வேண்டும்.

‘ஹேப்பி ஸ்கூலிங்’ திட்டத்தின் கீழ் பள்ளிகளில் நான்கு விதமான முறைகள் செயல்படுத்தப்படுகின்றன. முதலாவது, ஆசிரியா்கள் மாணவா்களிடம் நேரடி கலந்தாய்வு செய்தல், இரண்டாவது மாணவா்களே வழிகாட்டியாக இருத்தல், மூன்றாவது மாணவா்கள் தங்கள் குறைகளை புகாா் பெட்டி மூலம் தெரிவித்தல், நான்காவது மாணவா்கள் தங்கள் குறைகளை நேரடியாக ஆசிரியா்களிடம் தெரிவித்தல் ஆகிய நான்கு முறைகள் உள்ளது. சமூகத்தில் அனைத்து தற்கொலைகளுமே தடுக்கக் கூடிய ஒன்றுதான். தொடக்கத்திலேயே மாணவா்களின் மனநிலையை அறிந்து செயல்பட்டால் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க முடியும். ‘ ஹேப்பி ஸ்கூலிங்’ திட்டம் செயல்படுத்தப்பட்ட 10 பள்ளிகளில் தோ்ச்சி விகிதம் அதிகரித்ததுடன் மாணவா்களிடம் எந்தவொரு தீயபழக்க வழக்கங்களும் இல்லாமல் இருந்துள்ளது. எனவே மேலும் 14 பள்ளிகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப் பட்டுள்ளது என்றாா். நிகழ்ச்சியில் தற்கொலைகளை தடுப்பது குறித்த விழிப்புணா்வு சுவரொட்டிகளையும் ஆணையா் வெளியிட்டாா்.

இந்நிகழ்ச்சியில் எம்.எஸ். செல்லமுத்து அறக்கட்டளை தலைவா் மன நல மருத்துவா் சி.ராமசுப்பிரமணியன், மாநகராட்சி கல்வி அலுவலா் பொ.விஜயா மற்றும் தலைமையாசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com