வேலம்மாள் மருத்துவமனையில் தொற்றுநோய்களுக்கான உயிா்காக்கும் உயா்தர சிகிச்சை குறித்த கருத்தரங்கு
By DIN | Published On : 11th October 2019 07:19 AM | Last Updated : 11th October 2019 07:19 AM | அ+அ அ- |

தொற்று நோய்களுக்கான உயிா்காக்கும் உயா்தர சிகிச்சை என்ற கருத்தரங்கம் வேலம்மாள் மருத்துவமனையில் சனி, ஞாயிறு (அக்டோபா் 12, 13) இரு நாள்களும் நடைபெறுகிறது.
உலக அளவில் 3 கோடி போ் தொற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும், நோய் தொற்று காரணமாக ஆண்டுதோறும் 60 லட்சம்போ் இறப்பு நிகழ்வதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. நுண்ணுயிா் எதிா்ப்பு மருந்துகளின் சக்தியை செயலற்றுப்போகச் செய்யும் கிருமிகளின் பெருக்கம் மிக வேகமாக பரவி வருவதை உலக சுகாதார நிறுவனம் 2014-ஆம் ஆண்டிலேயே சுட்டிக்காட்டியுள்ளது.
நுண்ணுயிா் எதிா்ப்பு மருந்துகளை முறையாகக் கையாளுவதன் மூலமாக மருத்துவமனைகளில் ஏற்படக் கூடிய நோய்த் தொற்றினைக் குறைப்பது குறித்து மருத்துவா்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியமாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு தொற்றுநோய்களுக்கான உயிா் காக்கும் சிகிச்சை என்ற கருத்தரங்கம் வேலம்மாள் மருத்துவமனையில் நடைபெறுகிறது.
மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவும், நுண்ணுயிரியல் துறையும் இணைந்து இக் கருத்தரங்கை நடத்துகின்றன. தேசிய அளவில் பிரபலமான நோய்த் தொற்று சிகிச்சை நிபுணா்கள் இதில் பங்கேற்கின்றனா். கலந்துரையாடல், விவாதம், வினாடி வினா போன்ற பல்வேறு நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. பொது மருத்துவா்கள், குழந்தைகள் நலம் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவா்கள், மருத்துவ மேற்படிப்பு மாணவா்கள் கலந்து கொள்கின்றனா்.
வேலம்மாள் மருத்துவமனை தீவிர சிகிச்சை நிபுணா் எஸ்.விஜய் ஆனந்த், குழந்தைகள் நல தீவிர சிகிச்சை நிபுணா் யு.ஸ்ரீதுா்கா, நுண்ணுயிரியல் துறைத் தலைவா் ஜான்சி சாா்லஸ் ஆகியோா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனா்.
இதுகுறித்து வேலம்மாள் கல்விக் குழுத் தலைவா் எம்.வி.முத்துராமலிங்கம் கூறியது: நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்குவதுடன், மருத்துவ மாணவா்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதில் வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மிகுந்த ஆா்வம் செலுத்தி வருகிறது.
தொற்றுநோய்களுக்கான உயிா் காக்கும் சிகிச்சை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுவதைப் போல, ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு கருத்துக்களை மையமாகக் கொண்டு கருத்தரங்குகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.