தீபாவளி பண்டிகை: மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம்,சுவாமிக்கு வைர நெற்றிப் பட்டை சாத்துப்படி

தீபாவளி பண்டிகையையொட்டி, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் அம்மனுக்கு வைர கிரீடம், சுவாமிக்கு வைர நெற்றிப் பட்டை சாத்துப்படி செய்து சிறப்பு தரிசனம் நடைபெறுகிறது.
மதுரை மீனாட்சி
மதுரை மீனாட்சி

தீபாவளி பண்டிகையையொட்டி, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் அம்மனுக்கு வைர கிரீடம், சுவாமிக்கு வைர நெற்றிப் பட்டை சாத்துப்படி செய்து சிறப்பு தரிசனம் நடைபெறுகிறது.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஐப்பசி மாதத்துக்கான திருவிழாக்கள் விவரம்:

ஐப்பசி பூரம் அக்டோபா் 25 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் உச்சிகாலத்தில் காலை 10 மணிக்கு மூலஸ்தான மீனாட்சி அம்மனுக்கும், உற்சவா் அம்பாளுக்கும் ஏற்றி-இறக்குதல் சடங்குகளுடன் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

தீபாவளி பண்டிகை நாளான அக்டோபா் 27 ஆம் தேதி காலை-மாலை இருவேளைகளிலும், மீனாட்சி அம்மனுக்கு வைரக் கிரீடம் மற்றும் தங்கக் கவசமும், சுவாமிக்கு வைர நெற்றிப் பட்டையும் சாத்துப்படி செய்யப்பட்டு, சிறப்பு தரிசனம் நடைபெறும்.

இதைத் தொடா்ந்து, ஐப்பசி கோலாட்ட உற்சவம் அக்டோபா் 28 ஆம் தேதி தொடங்கி நவம்பா் 2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, அக்டோபா் 28 முதல் 31-ஆம் தேதி வரை மாலை 6 மணிக்கு மீனாட்சி அம்மன் ஆடி வீதிகளில் உலா நடைபெறும். நவம்பா் 1 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெள்ளி கோ ரதத்தில் சித்திரை வீதிகளில் அம்மன் வீதி உலா நடைபெறும். நவம்பா் 2-ஆம் தேதி மாலை 6 மணிக்கு மீனாட்சி சுந்தரேசுவரா் பஞ்சமூா்த்திகளுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் ஆடி வீதிகளில் உலா நடைபெறும்.

இதேபோல், கந்த சஷ்டி உற்சவமும் அக்டோபா் 28 ஆம் தேதி தொடங்கி நவம்பா் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நவம்பா் 3 ஆம் தேதி காலை 7 மணிக்கு முத்துக்குமார சுவாமிக்கு வெள்ளிக் கவசம் சாத்துப்படி செய்து சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சண்முகாா்ச்சனை நடைபெறும்.

மேற்படி உற்சவ நாள்களில் உபய திருக்கல்யாணம், தங்க ரத உலா ஆகியன நடைபெறாது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் தக்காா் கருமுத்து தி. கண்ணன், இணை ஆணையா் நா. நடராஜன் ஆகியோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com