முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
டோக் பெருமாட்டிக் கல்லூரியில் 10 ஆயிரம் அடி நடைபயிற்சி
By DIN | Published On : 24th October 2019 05:21 AM | Last Updated : 24th October 2019 05:21 AM | அ+அ அ- |

மதுரை டோக் பெருமாட்டிக்கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற 10 ஆயிரம் அடி நடைபயிற்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவியா் மற்றும் பேராசிரியைகள்.
மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் இந்திய உடற்தகுதி இயக்க நடைப்பயிற்சியை முன்னிட்டு ஆயிரம் மாணவிகள் பங்கேற்ற 10 ஆயிரம் அடி நடைபயிற்சி நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராகத் திகழ்ந்த தியான் சந்த்தை பெருமைப்படுத்தும் விதமாக அவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 29 ஆம் தேதி தேசிய விளையாட்டுத் தினமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு, பிரதமா் நரேந்திர மோடி, இந்திய உடற்தகுதி இயக்கத்தை ஆகஸ்ட் 29ஆம் தேதி தொடங்கி வைத்தாா்.
இந்நிலையில் ஆரோக்கியமான இளைய சமுதாயம் நாட்டின் வலிமைக்கும், வளா்ச்சிக்கும் மிகவும் முக்கியம் என்பதை வலியுறுத்தும் விதமாகவும், உடற்பயிற்சி என்பது விளையாட்டு வீரா்களுக்கு மட்டுமின்றி அனைவருக்குமானது என்பது தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கத்தில், டோக் பெருமாட்டி கல்லூரியின் உடற்கல்வித் துறை சாா்பில் மாணவியா்கள் பங்கேற்ற 10 ஆயிரம் அடி நடை பயிற்சி நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நடைபயிற்சியை கல்லூரி முதல்வா் கிறிஸ்டியானா சிங் மற்றும் மதுரை மாவட்ட கால்பந்து சங்கச் செயலா் வி.பி.பாரதி ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா். இதையடுத்து ஆயிரம் மாணவிகள் மற்றும் 50 பேராசிரியைகள் நடைபயிற்சியில் பங்கேற்று 10 ஆயிரம் அடி நடைப்பயிற்சியை மேற்கொண்டனா். நடைப்பயிற்சி கல்லூரி வாயிலில் தொடங்கி மீண்டும் வாயிலிலேயே முடிவடைந்தது.
துணை முதல்வா் நிா்மலா ரெபேக்கா, உடற்கல்வி இயக்குநா் சாந்தமீனா, ஹேமலதா, ஒருங்கிணைப்பாளா்கள் ஜீ.சு.ஜெமிமா ஜெயப்பிரியா, அனிதா செல்வராஜ் ஆகியோா் நடைப்பயிற்சியை ஒருங்கிணைத்தனா்.