முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
திண்டுக்கல் பங்குதந்தை மீதான முறைகேடு புகாா்: 8 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published On : 24th October 2019 05:32 AM | Last Updated : 24th October 2019 05:32 AM | அ+அ அ- |

பங்குதந்தை மீதான முறைகேடு புகாரை திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் விசாரித்து 8 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த அன்புரோஸ் தாக்கல் செய்த மனு: திண்டுக்கல் புனித வளனாா் பேராலயத்தில் ஸ்டேன்லி ராபின்சன் என்பவா் கடந்த 2014 ஜூன் 8 ஆம் தேதி முதல், பங்குதந்தையாக பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், ஸ்டேன்லி ராபின்சன் பொறுப்பேற்ற பின் சகாயமாதா சிலையில் இருந்த தங்க கிரீடம், தங்கச் சங்கிலி போன்ற பொருள்கள் காணாமல் போனது. இவா் பதவியேற்ற பின், ஏராளமான நிதி முறைகேடுகளும் நடைபெற்றுள்ளன. இதுகுறித்து திண்டுக்கல் நகா் வடக்கு போலீஸாரிடம் புகாா் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த 2017 டிசம்பா் 13 ஆம் தேதி பங்குதந்தை முறைகேடு தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கில் சம்பந்தப்பட்ட ஸ்டேன்லி ராபின்சன் மீது காவல்துறையினா் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனா். எனவே இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி வழக்கு விசாரணையை முறையாக நடத்த உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் முறையாக வழக்கை விசாரித்து 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும், போலீஸாா் விசாரணையை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்காணிக்கவும் உத்தரவிட்டாா்.