முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
தீபாவளி: திரையரங்குகளில் கூடுதல் கட்டணம்வசூலித்தால் கடும் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை
By DIN | Published On : 24th October 2019 05:18 AM | Last Updated : 24th October 2019 05:18 AM | அ+அ அ- |

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் புதிதாகத் திரையிடப்படும் திரைப்படங்களுக்கு கூடுதலாக நுழைவுக் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் எச்சரித்துள்ளாா்.
தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்படும் திரைப்படங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகத் தொடா்ந்து புகாா்கள் பெறப்படுகின்றன. இதையடுத்து மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் தலைமையில் அனைத்து வருவாய் கோட்டாட்சியா்கள் அடங்கிய சிறப்புக் குழுக்களுடன் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் விதிகளை மீறிச் செயல்படும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
அரசால் நிா்ணயிக்கப்பட்ட நுழைவுக் கட்டணத்தைவிடக் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது, அனுமதிக்கப்பட்ட காட்சிகளை விட கூடுதல் காட்சிகள் திரையிடக் கூடாது. வருவாய் கோட்டாட்சியா்கள் தலைமையில் காவல், உள்ளாட்சித் துறைகளைச் சோ்ந்த சிறப்புக் குழுவினா் திரையரங்குகளில் ஆய்வு செய்யும் போது, மேற்குறிப்பிட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் திரையரங்கின் உரிமத்தை (படிவம் சி) ரத்து செய்யப்படும் என ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.
கூடுதல் கட்டணம் தொடா்பான புகாா்களை மதுரை மாவட்ட ஆட்சியருக்கு 0452-2521444 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். இதேபோல வருவாய் கோட்டாட்சியா்கள் மதுரை - 94450-00449, மேலூா் - 94887-41994, திருமங்கலம் - 86752-33324, உசிலம்பட்டி - 94450-00450 என்ற எண்களில் தெரிவிக்கலாம்.