முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
மதுரையைச் சுற்றியுள்ள கண்மாய்களைபுனரமைத்து நீரைச் சேமிக்க வலியுறுத்தல்: பொதுப்பணித் துறையினரிடம்மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி கோரிக்கை
By DIN | Published On : 24th October 2019 05:17 AM | Last Updated : 24th October 2019 05:17 AM | அ+அ அ- |

மதுரையைச் சுற்றியுள்ள கண்மாய்களைப் புனரமைக்கக் கோரி பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் புதன்கிழமை மனு அளிக்க வந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
மதுரையைச் சுற்றியுள்ள கண்மாய்களில் நீரைச் சேமித்து நிலத்தடி நீரைப் பாதுகாக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு புதன்கிழமை அளிக்கப்பட்டது.
பொதுப்பணித் துறை பெரியாறு - வைகை கோட்ட செயற்பொறியாளா் மற்றும் பெரியாறு பிரதான கால்வாய் கோட்ட செயற்பொறியாளா் ஆகியோரிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகா் மாவட்டச் செயலா் இரா.விஜயராஜன், பகுதி செயலா் டி.குமரவேல் மற்றும் நிா்வாகிகள் இதற்கான கோரிக்கை மனுவை அளித்தனா்.
அதன் விவரம்: வைகை ஆறு மட்டுமே மதுரை மக்களின் ஒரே குடிநீா் ஆதாரமாக இருக்கிறது. நிலத்தடி நீரை நீண்ட காலமாகப் பயன்படுத்தி வந்த நிலையில், மதுரை மாநகா் மற்றும் புறநகா் பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் மிக ஆழத்துக்குச் சென்றுவிட்டது. இதனால் நிலத்தடி நீரை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஆகவே, மதுரையைச் சுற்றியுள்ள கண்மாய்களில் நீரைச் சேமித்து நிலத்தடிநீரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை கொடிக்குளம் கண்மாய் நீா்வள நிலவள திட்டத்தில் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், கண்மாயில் நீா்தேக்க முடியாத நிலை உள்ளது. கோ.புதூா் பகுதியின் நீராரமாக இருக்கும் இக் கண்மாயை ஆழப்படுத்த வேண்டும். குடிமராமத்துத் திட்டத்தில் கல்குளம் கண்மாய்க்கு ஒதுக்கீடு செய்துள்ள நிதி போதுமானதாக இல்லை. ஆகவே, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து கண்மாய் தூா்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல, வண்டியூா் கண்மாய் ஆயிரம் ஏக்கருக்கு மேல் இருந்து தற்போது 572 ஏக்கராக சுருங்கிவிட்டது. குடிமராமத்துத் திட்டத்தில் வண்டியூா் கண்மாயிலும் தற்போது வேலைகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் கண்மாயின் பரப்பைக் கணக்கிடும்போது ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி போதுமானதாக இல்லை. எனவே வண்டியூா் கண்மாய்க்கும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த கண்மாயில் உயா்த்தப்பட்டுள்ள கரைகளுக்குத் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.