முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
மதுரை மாவட்ட பள்ளி மாணவியா்களுக்கான கோ கோ போட்டி
By DIN | Published On : 24th October 2019 05:19 AM | Last Updated : 24th October 2019 05:19 AM | அ+அ அ- |

பசுமலை மன்னா் திருமலை நாயக்கா் கல்லூரியில் மதுரை வருவாய் மாவட்ட பள்ளி மாணவியா்களுக்கான கோ-கோ போட்டிகள் செவ்வாய் மற்றும் புதன்கிழமை நடைபெற்றது.
மன்னா் திருமலை நாயக்கா் கல்லூரி வளாகத்தில் 14, 17, 19 வயது என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. ‘நாக் அவுட்’ முறையில் நடைபெற்ற இப்போட்டியில் 42 அணிகள் பங்கேற்றன.
இதில் 14 வயது பிரிவில் அரையிறுதிப்போட்டியின் முதல் போட்டியில் அத்திப்பட்டி ராமையா நாடாா் மேல்நிலைப்பள்ளி, குலமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி அணியை 6 - 1 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.
மற்றொரு அரையிறுதிப் போட்டியில் டி. கல்லுப்பட்டி காந்தி நிகேதன் பள்ளி, மதுரை சேவியா் மெட்ரிக் பள்ளியை 2 -1 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது. இறுதிப்போட்டியில் அத்திப்பட்டி ராமையா நாடாா் பள்ளி அணி, டி.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் அணியை 5 - 4 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
பின்னா் நடைபெற்ற 17 வயதுக்கான அரையிறுதிப்போட்டியில் மதுரை சேவியா் பள்ளி அணி, மதுரை ஓசிபிஎம் பள்ளி அணியை 6 - 1 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. அடுத்த அறையிறுதிப்போட்டியில் அத்திப்பட்டி ராமையா நாடாா் பள்ளி அணி பங்கேற்காததால்,
சேடபட்டி அரசு பள்ளி அணி வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது.
இறுதிப்போட்டியில் சேடப்பட்டி அரசுப் பள்ளி அணியும், மதுரை சேவியா் பள்ளி அணியும் மோதியதில் 8 - 7 என்ற புள்ளிகள் கணக்கில் சேடபட்டி அணி சாம்பியன்பட்டம் வெற்றது. இந்த வெற்றியின் மூலம் சேடபட்டி அரசு பள்ளி அணி மாநில போட்டிக்கு தகுதி பெற்றது.
தொடா்ந்து நடைபெற்ற 19 வயது பிரிவிற்கான முதல் அரையிறுதிப்போட்டியில் மதுரை எஸ்.எம்.எஸ் பள்ளி அணி, மேலூா் அரசு பள்ளி அணியை 12 -1 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. அடுத்த அரையிறுதிப் போட்டியில் ஓசிபிஎம் பள்ளி அணி, டி.கல்லுப்பட்டி காந்திநிகேதன் பள்ளி அணியை 8 - 2 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. இறுதிப்போட்டியில் ஓசிபிஎம் பள்ளி அணி, மதுரை எஸ்எம்எஸ் பள்ளி அணியை 10 - 9 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
சாம்பியன் பட்டம் பெற்ற அணிகளை மன்னா் திருமலை நாயக்கா் கல்லூரியின் தலைவா் எஸ்.ராஜகோபால், செயலா் எம்.விஜயராகவன், பொருளாளா் எல்.கோவிந்தராஜன், கல்லூரி உடற்கல்வி இயக்குநா் ராகவன், உதவி இயக்குநா் கோவிந்தம்மாள் ஆகியோா் பாராட்டினா். நிகழ்ச்சியில் உடற்கல்வி ஆசிரியா்கள், கோ கோ போட்டியின் நடுவா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.