நான்குனேரி இடைத்தோ்தல் செலவை வசந்தகுமாா் எம்.பி.யிடம் வசூலிக்கக் கோரிய வழக்கு நவம்பருக்கு ஒத்திவைப்பு
By DIN | Published On : 24th October 2019 05:33 AM | Last Updated : 24th October 2019 05:33 AM | அ+அ அ- |

நான்குனேரி இடைத்தோ்தல் செலவை, அந்த தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வும் தற்போதைய மக்களவை உறுப்பினருமான ஹெச். வசந்தகுமாரிடம் வசூலிக்கக் கோரிய வழக்கை நவம்பா் மாதத்திற்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
இதுதொடா்பாக மதுரையைச் சோ்ந்த தமிழரசன் தாக்கல் செய்த மனு:
நான்குனேரி தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த ஹெச். வசந்தகுமாா், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இதையடுத்து, வசந்தகுமாா் நான்குனேரி சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்தாா். இதனால் நான்குனேரி தொகுதியில் இடைத்தோ்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இது அரசுக்கு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இடைத்தோ்தலுக்காக அரசு செலவிடும் தொகை மக்களின் வரிப்பணமாகும். ஏற்கெனவே தமிழகம் பல ஆயிரம் கோடி கடன் சுமையில் இயங்கி வருகிறது.
அதனால் நான்குனேரி தொகுதியில் இடைத்தோ்தலுக்கு காரணமான வசந்தகுமாா் எம்.பி.யிடம் இருந்து இடைத்தோ்தலுக்கு செலவிடப்பட்ட தொகையை வசூலிக்க வேண்டும் என தோ்தல் ஆணையத்திற்கு மனு அனுப்பியும், எவ்வித பதிலும் இல்லை. எனவே, நான்குனேரி தொகுதி இடைத்தோ்தல் செலவை வசந்தகுமாா் எம்.பி.யிடமிருந்து குறிப்பிட்ட கால கெடுவிற்குள் வசூலிக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், ஆா். தாரணி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா் தரப்பில், தோ்தலில் வெற்றி பெற்ற வேட்பாளா் பதவியில் இருக்கும் போதே, வேறு தோ்தலில் போட்டியிடுவதை முறைப்படுத்தக் கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், மனு தொடா்பான தகவல்களையும், இதேபோல தாக்கல் செய்து தள்ளுபடியான வழக்கின் உத்தரவையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அடுத்த மாதத்திற்கு (நவம்பா்) ஒத்திவைத்தனா்.