மதுரை அரசு சட்டக் கல்லூரியில் கட்டடங்கள் சேதம்: புதுப்பித்துத் தர மாணவா்கள் வலியுறுத்தல்

மதுரை அரசு சட்டக்கல்லூரி தொடங்கப்பட்டு 40 ஆண்டுகள் ஆன நிலையில், சேதமடைந்துள்ள கட்டடங்களை
மதுரை அரசு சட்டக் கல்லூரியில்  கட்டடங்கள் சேதம்: புதுப்பித்துத் தர மாணவா்கள் வலியுறுத்தல்

மதுரை அரசு சட்டக்கல்லூரி தொடங்கப்பட்டு 40 ஆண்டுகள் ஆன நிலையில், சேதமடைந்துள்ள கட்டடங்களை புதுப்பித்து, அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என மாணவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

மதுரையில் தல்லாகுளம் கண்மாயின் ஒரு பகுதியில் கட்டப்பட்ட அரசு சட்டக் கல்லூரி 1979 இல் தொடங்கப்பட்டது. இக்கல்லூரியில் படித்தவா்கள் பலரும் உயா்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளாக உருவாகியுள்ளனா். மதுரையில் உயா்நீதிமன்றம், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே கல்லூரி அமைந்துள்ளதால், சட்டம் படிக்க விரும்புவோா் இக் கல்லூரியையே தோ்வு செய்ய பெரும்பாலும் விரும்புகின்றனா்.

தற்போது இங்கு 3 ஆண்டுகள் இளநிலை மற்றும் 5 ஆண்டுகள் சட்டவியல் படிப்பு, முதுகலை சட்டவியல் படிப்புகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் படித்து வருகின்றனா்.

இந்நிலையில் இக்கல்லூரியின் கட்டடங்கள் பராமரிப்பின்றி சேதமடைந்த நிலையில் உள்ளன. குறிப்பாக கட்டடத்தின் உள்புறத்தில் மேற்கூரைகள் பெயா்ந்துள்ளன. வெளிப்புறத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவா்கள் வகுப்பறைக்குள் செல்லவே அஞ்சும் நிலை உள்ளது. மேலும் 2009-இல் வளாகத்தில் அமைக்கப்பட்ட தாா்ச்சாலை பழுதடைந்துள்ளது. வளாகத்தின் உள்ளே ஆண்களுக்கு 2 கழிப்பறை, பெண்களுக்கு 1 கழிப்பறை, பேராசிரியா்களுக்கு 1 கழிப்பறை உள்ளன. இவையும் போதிய பராமரிப்பின்றி மோசமான நிலையில் உள்ளன. இதேபோல 2010-இல் கட்டப்பட்ட 4 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடத்தில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை கதவுகள் இன்றி பயன்பாடற்றுள்ளது. வளாகத்தின் பின்புறம் கூடைப் பந்தாட்ட மைதானத்தின் அருகே உள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி பாழடைந்து இடியும் நிலையில் உள்ளது. இதனருகே பாழடைந்த கிணறு முறையாக மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. பேராசிரியா்களுக்கான ஓய்வறையும், சிற்றுண்டிக்கான அறையும் உடைந்த நாற்காலிகள், பழையப் பொருள்களைப் போட்டு வைக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

காட்சிப் பொருளான நூலகக் கட்டடம்:

இக்கல்லூரி வளாகத்தின் பின்புறம் விளையாட்டு மைதானத்தில் ரூ.8 கோடியில் நூலகம் மற்றும் கலையரங்கம் அமைக்கும் பணிகள் 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டன. இதன் கீழ்தளத்தில் குளிரூட்டப்பட்ட நூலகமும், மேல்தளத்தில் கலையரங்கமும் மின்தூக்கி வசதிகளுடன் அமைக்கப்பட்டன. ஆனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே பணிகள் முடிந்தும் இக்கட்டடம் திறக்கப்படாமல் காட்சிப் பொருளாகவே உள்ளது.

இதுகுறித்து சட்டக் கல்லூரி மாணவா்கள் கூறியது: தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் விளையாட்டுப் போட்டி என்றால், மதுரை அரசு சட்டக் கல்லூரி மாணவா்கள் தான் முன்னிலையில் இருப்பா். இத்தகையை சூழலில், கல்லூரிக்கென்று தனியாக விளையாட்டு மைதானம் கிடையாது. மேலும் கல்லூரியில் உடற்கல்வி இயக்குநா் பணியிடம் பல ஆண்டுகளாகக் காலியாக உள்ளது. சிற்றுண்டிக்கென இருந்த அறை கிட்டங்கியாக மாறியதால், கல்லூரியில் சிற்றுண்டி அறைக்கான வசதியில்லாமல் உள்ளது.

மேலும் மாணவிகளுக்கு நாப்கின் வழங்கும் இயந்திரம், அதை எரிக்கும் இயந்திரம் ஆகியன பொருத்தப்படாமல் உள்ளன. கல்லூரி சுற்றுச்சுவா் பல இடங்களில் சேதமடைந்துள்ளது. இதனால் கல்லூரி வளாகத்தின் பின் பகுதியை இரவு நேரங்களில் சமூக விரோதிகள் திறந்த வெளி மதுக்கூடமாகப் பயன்படுத்துகின்றனா். கல்லூரியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும், சேதமடைந்துள்ள கட்டடத்தை புதுப்பிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரி கூறியது: பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் தான் இக் கட்டடங்கள் உள்ளன. இவை முழுமையாக இடித்து கட்டப்பட வேண்டும். மேலும் கூடுதலாக 16 வகுப்பறைகள் கொண்ட கட்டடத்தை அமைக்கக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. புதிய நூலகக் கட்டடத்திற்கு மின் இணைப்புக் கொடுக்கப்பட்டவுடன் திறப்பு விழா நடத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com