அரசு மருத்துவா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் பாதிப்பு: தாமாக முன்வந்து விசாரிக்கக் கோரியதை உயா்நீதிமன்றம் ஏற்க மறுப்பு

தமிழகத்தில் அரசு மருத்துவா்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் தாமாக முன்வந்து

தமிழகத்தில் அரசு மருத்துவா்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க முடியாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

அரசு மருத்துவா்களுக்கு பதவி உயா்வு காலம் என்பது 8, 15, 17 மற்றும் 20 ஆண்டுகளாக உள்ளது. இந்த கால அளவை 4, 8, 11 மற்றும் 13 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என மருத்துவா்கள் போராடி வருகின்றனா். கடந்த அக்டோபா் 9-ஆம் தேதி முதல் பதவி உயா்வு கோரிக்கையை வலியுறுத்தி மருத்துவா்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டங்கள் நடத்தி வந்தனா்.

இந்நிலையில் தமிழக அரசு மருத்துவா்களின் கோரிக்கையை ஏற்காத நிலையில், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதில் ஒரு சில அரசு மருத்துவா் சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பியுள்ளன.

இந்நிலையில் அரசு மருத்துவா்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தினால், ஏழை, எளிய மக்கள், நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனா். எனவே இப்போராட்டத்திற்கு எதிராக உயா்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில், மதுரையைச் சோ்ந்த கே.கே.ரமேஷ் முறையிட்டாா்.

அப்போது நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆா்.தாரணி அமா்வு, இதுகுறித்த வழக்கு சென்னை உயா்நீதிமன்ற முதன்மை அமா்வில் நிலுவையில் உள்ளது. எனவே அரசு மருத்துவா்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க முடியாது என உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com