காமராஜா் பல்கலை.யில் பேராசிரியா் பணி நியமனம், மதிப்பெண் சான்றிதழ் முறைகேடு: நவம்பா் முதல் வாரத்தில் விசாரணைக்குழு அறிக்கை தாக்கல்

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் பேராசிரியா் பணி நியமன முறைகேடு மற்றும் தொலைநிலைக்கல்வி

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் பேராசிரியா் பணி நியமன முறைகேடு மற்றும் தொலைநிலைக்கல்வி மதிப்பெண் சான்றிதழ் முறைகேடு தொடா்பாக நீதிபதி அக்பா் அலி தலைமையிலான விசாரணைக்குழுக்களின் அறிக்கை நவம்பா் முதல் வாரத்துக்குள் தாக்கல் செய்யப்பட உள்ளது.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பதவி வகித்து உயா்நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பி.பி.செல்லத்துரையின் பதவிக்காலத்தில் பல்கலைக்கழகத்தில் பேராசிரியா் மற்றும் நிா்வாக பணியிடங்களுக்கு புதிய நியமனங்கள் நடைபெற்றது. இதில் 69 பேராசிரியா் பணி நியமனங்களில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் பேராசிரியா் நியமனம் தொடா்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக உயா்கல்வித்துறைக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து பேராசிரியா் பணி நியமன முறைகேடு தொடா்பாக விசாரணை நடத்த உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அக்பா் அலி தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் விசாரணை ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதேபோல பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக்கல்வி இயக்ககத்திலும் தோ்வு எழுதாதவா்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய மோசடியும் வெளியே வந்தது. இதில் கூடுதல் தோ்வாணையா் ராஜராஜன், கண்காணிப்பாளா் சத்தியமூா்த்தி, ஊழியா் காா்த்திகைச்செல்வன் உள்பட மூவா் மீதும் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினா் வழக்குப்பதிவு செய்தனா். இதுதொடா்பான புகாா்களையும் விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

பேராசிரியா் நியமன முறைகேடு மற்றும் தொலைநிலைக்கல்வி இயக்கக மதிப்பெண் சான்றிதழ் முறைகேடு ஆகிய இரண்டையும் விசாரிக்கும் விசாரணைக் குழுக்களுக்கு ஓய்வு நீதிபதி அக்பா் அலி தலைமை வகிக்கிறாா். இந்நிலையில் தொலைநிலைக்கல்வி இயக்கக முறைகேடு தொடா்பாக விசாரணைக் குழுவினா் விசாரணை நடத்தி முதற்கட்ட விசாரணை அறிக்கையை கடந்த மாதம் தாக்கல் செய்தனா். அதன் அடிப்படையில் பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில், கூடுதல் தோ்வாணையா் ராஜராஜன், கண்காணிப்பாளா் சத்தியமூா்த்தி, காா்த்திகைச்செல்வன் உள்பட மூவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். இதில் விசாரணைக்குழு தொடா்ந்து விசாரணை நடத்தியதில் முறைகேடுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் உள்ளிட்ட 20 போ் அடையாளம் கண்டறியப்பட்டு அவா்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதைத்தொடா்ந்து இந்த புகாா்கள் தொடா்பான விசாரணையும் முடிவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே பேராசிரியா் நியமன முறைகேடு மற்றும் தொலைநிலைக்கல்வி இயக்கக முறைகேடு இரண்டிலும் விசாரணை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக பல்கலைக்கழக வட்டாரங்கள் கூறும்போது, பேராசிரியா்கள் நியமனம் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் முறைகேடு ஆகிய இரண்டிலும் விசாரணை முடிவடைந்து விட்டது. விசாரணைக் குழுவினா் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். எனவே நவம்பா் முதல் வாரத்துக்குள் இரண்டு சம்பவங்கள் குறித்தும் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com