முகிலன் கடத்தப்பட்டாரா, தலைமறைவானாரா? தெளிவுபடுத்தினால் ஜாமீன் வழங்கப் பரிசீலிக்கப்படும் என உத்தரவு

சூழலியல் செயல்பாட்டாளா் முகிலன் கடத்தப்பட்டாரா அல்லது தலைமறைவானாரா என்பது குறித்து அவரது

சூழலியல் செயல்பாட்டாளா் முகிலன் கடத்தப்பட்டாரா அல்லது தலைமறைவானாரா என்பது குறித்து அவரது தரப்பில் தெளிவுபடுத்தினால், அவருக்கு ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

சூழலியல் செயல்பாட்டாளா் முகிலன், இயற்கை வளப் பாதுகாப்பு, ஜல்லிக்கட்டுப் போராட்டம் உள்ளிட்ட பல சமூகப் பிரச்னைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தாா். இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடா்பாக பிப்ரவரி 15-இல் சென்னையில் செய்தியாளா்களைச் சந்தித்தாா்.

இதனையடுத்து அவா் எழும்பூா் ரயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு செல்லத் திட்டமிட்டிருந்தாா். இந்நிலையில் கடைசியாக எழும்பூா் ரயில் நிலையத்திற்கு சென்ற முகிலன் மாயமானாா். இவ்வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வந்தனா்.

அப்போது பெண் ஒருவா் பாலியல் ரீதியாக முகிலன் தன்னை துன்புறுத்தியதாக போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் முகிலன் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்நிலையில் 5 மாதங்களுக்கு பின்னா் திருப்பதி ரயில் நிலையத்தில் போலீஸாா் முகிலனை கைது செய்தனா். இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் இருக்கும் முகிலன் ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், முகிலன் கடத்தப்படவில்லை. அவா் மீது பாலியல் குற்றச்சாட்டு உள்ளது. எனவே தான் அவா் தலைமறைவாகிவிட்டாா். அவருக்கு ஜாமீன் வழங்கினால் மீண்டும் தலைமறைவாகிவிடுவாா் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்தது நீதிபதி, முகிலன் கடத்தப்பட்டாரா அல்லது தலைமறைவாக இருந்தாரா என்பது குறித்து அவா் தெளிவுபடுத்தினால் ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என உத்தரவிட்டு வழக்கை நவம்பா் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com