தலைமை நீதிபதி பணியிட மாற்றம் விவகாரம்: மதுரையில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 11th September 2019 07:40 AM | Last Updated : 11th September 2019 07:40 AM | அ+அ அ- |

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில ராமாணீ பணியிட மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து மதுரையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே. தஹில ராமாணீ. இவரை மேகாலய மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழு (கொலீஜியம்) பரிந்துரைத்தது.
அந்த பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு தலைமை நீதிபதி வி.கே. தஹில ராமாணீ, கொலீஜியத்திடம் கோரிக்கை வைத்தார். அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், தலைமை நீதிபதி வி.கே. தஹில ராமாணீ தனது பதவியை ராஜிநாமா செய்தார். இந்நிலையில், தலைமை நீதிபதியின் பணியிட மாற்றத்தை கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் எம்பிஎச்ஏஏ, எம்பிஏ., வழக்குரைஞர்கள் சங்கங்களைச் சேர்ந்த ஏராளமான வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை தங்களது பணிகளை புறக்கணித்தனர்.
மேலும் அவர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வளாகம் அருகே சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே. தஹில ராமாணீயின் பணியிட மாற்றத்தை ரத்து செய்யக்கோரி செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகளான வழக்குரைஞர்கள் ராமமூர்த்தி, மகேந்திரபதி, இளங்கோ, மூத்த வழக்குரைஞர் வீரகதிரவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நீதிமன்ற பணிகள் புறக்கணிப்பு தொடர்வது குறித்தும் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்தும், வியாழக்கிழமை பொதுக்குழுக் கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்படும் என எம்பிஎச்ஏஏ வழக்குரைஞர்கள் சங்கச் செயலர் மகேந்திரபதி தெரிவித்துள்ளார்.