"தமிழகத்தில் தனித்தனி மயானங்கள் அமைப்பதை ஊக்குவிக்கக் கூடாது'

தமிழகத்தில் ஜாதிய அடிப்படையில் தனித்தனி மயானங்கள் உருவாக்குவதை ஊக்குவிக்கக்கூடாது என்று

தமிழகத்தில் ஜாதிய அடிப்படையில் தனித்தனி மயானங்கள் உருவாக்குவதை ஊக்குவிக்கக்கூடாது என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் துணைத்தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
மதுரையில் மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களின் நிலை குறித்த ஆய்வுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையர் ச.விசாகன் தலைமை வகித்தார். இதில்  தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணைய துணைத் தலைவர் எல்.முருகன் பங்கேற்றார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது: 
மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பட்டியல் இனத்தவர்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும்,  மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் பட்டியல் இனத்தவர்களின் பதவி உயர்வு, பணியமைப்பு, குறைகள் உள்ளிட்டவை தொடர்பான விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மதுரை மாநகராட்சியில் குரூப் பி, சி, டி ஆகிய பிரிவுகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குமாறும், குருப் டி பிரிவில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்குமாறும் கூறப்பட்டுள்ளது. 
துப்புரவுப் பணியாளர்களின் கல்வித் தகுதியை கொண்டு பதிவு எழுத்தர் உள்ளிட்ட பதவி உயர்வு வழங்குமாறும், மாநகராட்சியில் பணியாற்றும் மொத்த பணியாளர்களில் பட்டியல் இனத்தவர்கள் எத்தனை சதவிகிதம் நிரப்பப்பட வேண்டும் என்பது குறித்தும் கணக்கிட்டு பணியமர்த்துமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 
மாநகராட்சியின் சார்பில் பட்டியல் இனத்தவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக தனி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை நான்கு மண்டலங்களிலும் பட்டியல் இன குறைதீர்க்கும் அலுவலர்கள் என தனியாக நியமித்து, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்தி பணியாளர்களின் குறைகளை 15 நாள்களுக்குள் நிவர்த்தி செய்ய வேண்டும். துப்புரவுப் பணியாளர்களில் நிரந்தரம், ஒப்பந்தப் பணியாளர்கள், தினக்கூலி ஆகிய அனைத்து பணியாளர்களுக்கும் கண்டிப்பாக இ.எஸ்.ஐ. பி.எப். பிடித்தம் செய்து  வங்கியில் நேரடியாக செலுத்த வேண்டும். 
பணியாளர்கள் வெளிநபர்களிடம் அதிக வட்டிக்கு கடன் பெறுவதை தவிர்க்க மாநகராட்சி பணியாளர் கூட்டுறவுச்சங்கங்கள் மூலம் ரூ.3.60 கோடி வரை கடன் வழங்கப்பட்டுள்ளது. அதனை மேலும் உயர்த்தி வழங்குமாறு கூறப்பட்டுள்ளது. துப்புரவு பணியாளர்களுக்கு குடிசை மாற்று வாரியம்
மூலம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. 4 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு பாரத பிரதமரின் திட்டம், பீமா யோஜானா திட்டத்தின் மூலம் காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணியாளர்களின் குறைகள், பதவி உயர்வு உள்ளிட்டவற்றை மூன்று மாத காலத்துக்குள் நிறைவேற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரட்டைச் சுடுகாடு இருப்பது வேதனைக்குரியது. இது தொடராமல் இருக்க இரட்டை சுடுகாடுகள் அமைப்பதற்கு அரசு நிதி அளிக்கக்கூடாது. அனைவருக்கும் பொதுவான சுடுகாடு என்பதை அறிவித்து கர்நாடக அரசு அண்மையில் புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. அதேபோல தமிழகத்திலும் சட்டம் கொண்டு வர அரசுக்கு பரிந்துரைக்கப்படும். 
தமிழகம் முழுவதும் தாழ்த்தப்பட்ட மாணவர் விடுதிகள் சுகாதாரமற்று மோசமான நிலையில் உள்ளன. இது அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து சென்னையில் ரூ.10 கோடி செலவில் விடுதிகள் சீரமைக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் இந்த நடவடிக்கை தொடர அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்றார்.
ஆய்வுக்கூட்டத்தில் நகரப் பொறியாளர் அரசு,  நகர்நல அலுவலர் வினோத்ராஜா, உதவி நகர்நல அலுவலர் (பொறுப்பு) இஸ்மாயில் பாத்திமா மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com