கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதால் குற்றச்செயல்கள் குறையும்: மாநகர காவல் ஆணையர்

குடியிருப்பு பகுதிகள் உள்பட அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவதால்

குடியிருப்பு பகுதிகள் உள்பட அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவதால் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காணலாம். இதனால் குற்றச்சம்பவங்கள் நடப்பதும் குறையும் என மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பேசினார்.
மதுரை மாநகர் தேனி பிரதான சாலையில் சம்மட்டிபுரம் சந்திப்பு, டிவிஎஸ் பேருந்து நிறுத்தம் அருகே காவல்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கண்காணிப்பு சாவடியை வியாழக்கிழமை திறந்து வைத்து  அவர் பேசியது: 
குடியிருப்பு பகுதிகள் உள்பட அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவதால் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காணலாம். இதனால் குற்றச்சம்பவங்கள் நடப்பதும் குறையும். 
மதுரை மாநகரில் 20 முதல் 25 லட்சம் வரை மக்கள் தொகை உள்ளது. ஆனால் அதனைவிட புறநகர் பகுதிகள் விரிவாக்கப் பகுதிகளில் மக்களின் எண்ணிக்கையும், குடியிருப்புகளும் அதிகரித்துள்ளன. இப்பகுதிகளில் தான் குற்றச்சம்பவங்களும் அதிகமாக நடக்கின்றன. இதனால் புறநகர் பகுதிகளில் காவல் நிலையங்களை உருவாக்க அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது திருப்பாலை, மாட்டுத்தாவணியில் 2 புதிய காவல்நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. விரைவில் எஸ்.எஸ்.காலனி பகுதியிலும் கூடுதலாக ஒரு காவல் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் உதவியுடன் நகரின் பல பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டப் பின்னர் தான், குற்றச்சம்பவங்கள் குறைந்து வருகின்றன. இதனால் புதிதாக வீடு கட்டுவோர்களை வீடு கட்டும் போதே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வலியுறுத்தி வருகிறோம். 
வெளியூர் செல்லும் பொதுமக்கள் போலீஸாரிடம் தகவல் கொடுத்துச் சென்றால், அவர்கள் வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தப்படியாக மதுரையில் தான் கொலை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. மதுரையில் படிப்பை நிறுத்திய இளைஞர்கள் தான் அதிகமாக குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். 50 சதவீதம் கொலைகள் முன்விரோதம் காரணமாக நடக்கின்றன. 
ஆனால் கடந்த ஆண்டுகளை விட, நிகழாண்டில் குற்றச்செயல்கள் குறைந்துள்ளன. இதற்கு கண்காணிப்பு கேமராக்கள் அதிகளவில் பொருத்தப்படுவது தான் காரணம். அதேபோல சென்னைக்கு அடுத்தப்படியாக மதுரையில் தான் வாகன விபத்துகள் அதிகமாக நடக்கின்றன. இதற்கு சாலைகளின் நடுவே தடுப்புகள் இல்லாததே காரணமாக உள்ளது. போலீஸாரின் முயற்சியால் தற்போது சாலை நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டு, விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளன. தேனி பிரதான சாலை மற்றும் மாநகரின் எல்லைப் பகுதியில் இந்த கண்காணிப்பு சாவடி அமைக்கப்பட்டிருப்பது மிகவும் அவசியமானதாக உள்ளது. இங்கு  தற்போது 3 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 25 கேமராக்கள் விரைவில் பொருத்த ஏற்பாடுகள் செய்யப்படும், என்றார். 
காவல் துணை ஆணையர் (போக்குவரத்து பிரிவு) சுகுமாரன், காவல் உதவி ஆணையர் வெற்றி செல்வன்,  டிவிஎஸ் சுந்தரம் நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com