கலால் வரி நிலுவை வழக்குகளுக்கு சமரசத் திட்டத்தில் தீர்வு காண டிச.31 வரை அவகாசம்: ஜிஎஸ்டி மற்றும் கலால் வரி இணை ஆணையர் தகவல்

மத்திய கலால் வரி மற்றும் சேவை வரிச் சட்டங்களின் கீழ் நிலுவையில் உள்ள வழக்குகளை "சப்கா விஸ்வாஸ்' சமரசத்

மத்திய கலால் வரி மற்றும் சேவை வரிச் சட்டங்களின் கீழ் நிலுவையில் உள்ள வழக்குகளை "சப்கா விஸ்வாஸ்' சமரசத் திட்டத்தில் தீர்வு காண டிசம்பர் 31-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்  என்று சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மத்திய கலால் வரி இணை ஆணையர் வி.பாண்டி ராஜா கூறினார்.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கத்துக்கு முன்பு இருந்த மத்திய கலால் வரி மற்றும் சேவை வரிச் சட்டங்களின்கீழ் நிலுவையில் உள்ள வழக்குகளை தாமாக முன்வந்து முடித்துக் கொள்ளும் வகையில் "சப்கா விஸ்வாஸ் -2019' என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மத்திய கலால் வரி இணை ஆணையர் வி.பாண்டி ராஜா பேசியது: கலால் மற்றும் சேவை வரி சட்டங்களின்கீழ் வரி நிலுவை வைத்துள்ளவர்கள், அபராதம் மற்றும் தாமதத் தொகைக்கு காரணம் கோரி அறிவிப்பாணை பெறப்பட்டு 2019 ஜூன் 30 ஆம் தேதிக்கு முன்பு இறுதி விசாரணை முடிவடையாமல் உள்ளவர்கள்,  இறுதி விசாரணை மீது மேல்முறையீடு செய்திருந்து அவ் விசாரணை முடிவடையாமல் இருப்பவர்கள்,  கட்டத் தவறிய வரி குறித்த விவரங்களைத் தாமாக முன்வந்து தெரிவிக்க விரும்புபவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெறலாம். 
தென்மாவட்டங்களை உள்ளடக்கிய மத்திய சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் கலால் வரி ஆணையத்தின்  மதுரை மண்டலத்தில் உள்ள அலுவலகங்களில் இத் திட்டம் தொடர்பாகத் தெரிந்து கொள்ளலாம். 
வருமான வரி, கலால் மற்றும் சேவை வரித் துறைகளில் இதுவரை வரி செலுத்துவோருக்கு பல்வேறு சமரசத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை அறிவிக்கப்பட்ட திட்டங்களில் இருந்து "சப்கா விஸ்வாஸ்-2019' திட்டம் வரி செலுத்துவோருக்கு மேலும் உகந்ததாக இருக்கிறது. வட்டி மற்றும் அபராதக் கட்டணங்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதோடு, செலுத்த வேண்டிய வரித் தொகையிலும் சலுகை அளிக்கப்படுகிறது.
மதுரை மண்டலத்தில் இத் திட்டத்தில் பயன்பெறுவதற்கு வரிசெலுத்துவோர் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர். பிற மண்டலங்களை ஒப்பிடும்போது மதுரையில் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இத் திட்டத்தில் சமரசம் செய்வதற்கு சாத்தியம் உள்ளவையாக  2 ஆயிரம் வழக்குகள்  இருக்கின்றன.  ஆகவே, ஜிஎஸ்டி-யில் முழு கவனம் செலுத்தும் வகையில்  மத்திய சேவை மற்றும் கலால் வரி சட்டங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை இத்திட்டத்தின் மூலமாக சுமூகமாக முடித்துக் கொள்ளலாம் என்றார்.
சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மத்திய கலால் வரி உதவி ஆணையர்கள் நவீன் அகர்வால், ஜி.கனகசுப்பிரமணியன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன், செயலர் ஜே.செல்வம் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள், வரி ஆலோசகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com