Enable Javscript for better performance
கடல் புயலில் சிக்கும் மீனவர்களை மீட்க விமான ஆம்புலன்ஸ் வசதி கோரி வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    கடல் புயலில் சிக்கும் மீனவர்களை மீட்க விமான ஆம்புலன்ஸ் வசதி கோரி வழக்கு

    By DIN  |   Published on : 14th September 2019 04:45 AM  |   அ+அ அ-   |    |  

    கடல் புயலில் சிக்கும் தமிழக மீனவர்களை மீட்க விமான ஆம்புலன்ஸ் வசதி கோரும் வழக்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. 
     ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் தாக்கல் செய்த மனு:
    தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்ட மக்கள் அதிகமாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மீன் ஏற்றுமதி அதிகரித்து அரசுக்கும் நல்ல வருவாய் கிடைத்து வருகிறது. 
    மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது கடல் புயலில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 
    அவ்வாறு உயிரிழக்கும் மீனவர்களின் சடலங்களை மீட்க முடியாத நிலை உள்ளது. இதனால் பல மீனவக் குடும்பங்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். கடலோர பாதுகாப்புப் படையினரிடம் போதிய மீட்புக் கப்பல் மற்றும் படகுகள் இல்லை. 
    கடல் புயலில் சிக்கும் மீனவர்களை மீட்டு முதலுதவி அளிக்கவும் வசதிகள் இல்லை. எனவே கடல் புயலில் சிக்கும் மீனவர்களை மீட்க விமான ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
    இந்த மனு நீதிபதி எஸ். வைத்தியநாதன், என்.ஆனந்த வெங்கடேஷ் அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இது குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
     

    kattana sevai