Enable Javscript for better performance
செவிலியர் நியமன அறிவிப்பாணைக்கு தடைகோரி மனு: சுகாதாரத் துறை செயலர் பதிலளிக்க உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    செவிலியர் நியமன அறிவிப்பாணைக்கு தடைகோரி மனு: சுகாதாரத் துறை செயலர் பதிலளிக்க உத்தரவு

    By DIN  |   Published on : 14th September 2019 04:44 AM  |   அ+அ அ-   |    |  

    குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவுக்கான செவிலியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வெளியான அறிவிப்பாணைக்குத் தடைகோரும் வழக்கில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
    திருநெல்வேலியைச் சேர்ந்த ஜெயராணி தாக்கல் செய்த மனு:
    உடல் நலக் குறைவோடு பிறக்கும் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவில் 520 செவிலியர் காலிப்பணியிடங்களை நிரப்ப மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியம் பிப்ரவரி மாதம் அறிவிப்பாணை வெளியிட்டது. நான் அதற்கு விண்ணப்பித்து தேர்வு எழுதி தேர்ச்சிப் பெற்றேன். 
     இந்நிலையில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி செவிலியர் பணிக்கு தேர்வானவர்களின் பட்டியல் வெளியானது. அதில் எனது பெயர் இல்லை. இதுகுறித்து விசாரித்தபோது, உடல் நலக்குறைவோடு பிறக்கும் குழந்தைகள் பாதுகாப்பில் 3 ஆண்டுகள் பணிபுரிந்ததற்கான சான்றிதழை, மாவட்ட சுகாதாரத்துறையின் இணை இயக்குநரிடம் சான்று கையொப்பம் பெற்று, இணையத்தில் விண்ணப்பிக்கும் போதே பதிவேற்றம் செய்திருக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். 
    நான் கோவை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநரிடம் சான்றிதழில் கையொப்பம் கேட்டபோது, அவர் மறுத்துவிட்டார். 
    இதையடுத்து நான் இணை இயக்குநரின் கையொப்பமில்லாத சான்றிதழை இணைத்து விண்ணப்பித்திருந்தேன். எழுத்துத்தேர்வு உள்பட செவிலியர் பணிக்கு முழுத்தகுதி கொண்ட நான், சுகாதாரத்துறை இணை இயக்குநரின் கையொப்பம் இல்லாததால் நிராகரிக்கப்பட்டுள்ளேன். எனவே மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பாணைக்கு இடைக்காலத் தடை விதிக்கவும், தன்னை பணியில் சேர்க்கப் பரிந்துரைக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
    இந்த மனு நீதிபதி வி.எம்.வேலுமணி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இதுகுறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலர், மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

    kattana sevai