நெகிழி ஒழிப்புக்கு அக்.27 வரை சிறப்பு நடவடிக்கை: ஆட்சியர்

தூய்மையே சேவை இயக்கத்தின்கீழ் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான சிறப்பு நடவடிக்கைகள் அக்டோபர் 27 ஆம் தேதி வரை நடைபெறும் என ஆட்சியர் த.சு.ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

தூய்மையே சேவை இயக்கத்தின்கீழ் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான சிறப்பு நடவடிக்கைகள் அக்டோபர் 27 ஆம் தேதி வரை நடைபெறும் என ஆட்சியர் த.சு.ராஜசேகர் தெரிவித்துள்ளார்.
தூய்மையே சேவை திட்டத்தின்கீழ் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி ஒழிப்பு நடவடிக்கையை, செப்டம்பர் 11 முதல் அக்டோபர் 27 வரை மக்கள் இயக்கமாக நடத்த பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியிருந்தார். 
இந்நிலையில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு மக்கள் இயக்கம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்  மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியர் த.சு.ராஜசேகர் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியர் பேசியது:
தூய்மையே சேவை இயக்கத்தின் ஒரு பகுதியாக அக்டோபர் 1-ஆம் தேதி வரை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விழிப்புணர்வு இயக்கம்  நடத்தப்படும். ஒரு முறை பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்களின் பாதிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவற்றின் பயன்பாட்டை முற்றிலும் கைவிடுவதற்கு தயார் செய்யப்படும்.
பொதுமக்களின் பங்கேற்புடன் அக்டோபர் 2-ஆம் தேதியன்று உறுதிமொழி எடுப்பது, அக்டோபர் 3 முதல் அக்டோபர் 27 வரை நெகிழிக் கழிவுகள் சேகரித்தல், அவற்றை மறுசுழற்சிக்குப் பயன்படுத்தல் ஆகிய சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
 இந்த சிறப்பு நடவடிக்கையின்போது ஒவ்வொரு துறையினரும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுறுத்தினார்.
 மதுரை மாநகராட்சி ஆணையர் ச.விசாகன், கூடுதல் ஆட்சியர் எஸ்.பி.அம்ரித், மாவட்ட வருவாய் அலுவலர் பி.செல்வராஜ்,  ஊராட்சிகள் உதவி இயக்குநர் செல்லத்துரை, முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன் மற்றும் பல்வேறு அலுவலர்கள் பங்கேற்றனர்.
2 நாள்கள் தாமதம்: தூய்மையே சேவை இயக்கத்தின்கீழ் நெகிழி ஒழிப்பு  பிரசார இயக்கம் செப்டம்பர் 11 முதல் அக்டோபர் 27 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மதுரை மாவட்டத்தில்  இதற்கான ஆலோசனைக் கூட்டமே, 2 நாள்கள் தாமதமாக தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com