தேசிய கல்விக் கொள்கை மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கும்

தேசிய வரைவு கல்விக் கொள்கை மாணவர்களின் இடைநிற்றல் சதவீதத்தை அதிகரிக்கும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.  


தேசிய வரைவு கல்விக் கொள்கை மாணவர்களின் இடைநிற்றல் சதவீதத்தை அதிகரிக்கும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.  
சென்னையில் இருந்து சனிக்கிழமை மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளிப்படையாகவே ஒரே தேசம், ஒரே மொழி (ஹிந்தி) இருந்தால் தான் இந்தியா வல்லரசாக முடியும் எனக்கூறியுள்ளார். இதுதான் அவர்களின் கனவுத்திட்டம். அவர்களின் வழிகாட்டு இயக்கமாக இருக்கும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளின் செயல்திட்டங்களை நடைமுறைபடுத்தும் அரசாக பாஜக அரசு செயல்படுகிறது.
   ஒரேதேசம், ஒரே கலாசாரம் என்றால், ஒரே தேசம், ஒரே மதம்,  ஒரேமொழி,  என்று பொருள். அப்படி எனில் இந்து மதத்தை தவிர வேறு மதங்கள் இருக்கக் கூடாது. ஹிந்தி மொழியைத் தவிர வேறு மொழிகள் இருக்கக் கூடாது. இந்து கலாசாரத்தை தவிர வேறு கலாசாரம் கூடாது என்பதுதான் அவர்களின் இறுதி இலக்கு. அதற்கேற்றார்போல கல்வி கொள்கையையும் தற்போது மாற்றி வருகின்றனர். இது மிகவும் ஆபத்தானது. ஜனநாயக சக்திகள் விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது.
  தமிழக அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என அறிவித்திருப்பது தேசிய கல்விக் கொள்கையில் இருக்கும் நடைமுறை. இதனை எதிர்க்க வேண்டிய தமிழக அரசு மக்கள் நலனில் அக்கரை இல்லாமல், மத்திய அரசின்  எல்லா நிலைப்பாடுகளையும் ஆதரிக்கிறது. கல்வித்துறையும் அப்படித்தான் இருக்கிறது. இது மிகவும் ஆபத்தானது. பிளஸ் 2 தேர்வு மட்டும் பொதுத்தேர்வாக இருக்க வேண்டும் என்பது தான் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் யோசனையாகும். இந்த கல்விக் கொள்கை கிராமப்புற, ஏழை மாணவர்களின் இடைநிற்றலின் சதவீதத்தை அதிகரிக்கும். அவர்கள் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டு அவர்கள் குலத்தொழிலுக்கு செல்லும் நிலையை உருவாக்கும். இளம் மாணவர்கள் மீது செய்யும் தாக்குதல் இது. இதனை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி எதிர்க்கிறது.
  காவல்துறையினர் பதாகை வைக்க மற்ற கட்சிகளுக்கு விதிக்கும் கட்டுப்பாடுகளை ஆளும் கட்சியினருக்கு விதிப்பதில்லை. அதனால்தான் அத்துமீறல்கள் நடந்து வருகின்றன. பல்லாவரத்தில் சுபஸ்ரீயின் மரணமும் இப்படித்தான் நிகழ்ந்துள்ளது. உயர்நீதிமன்றம் வழிகாட்டுதல் தந்திருந்தால் கூட அதனை நடைமுறைப்படுத்துவதில்லை. பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், சட்டம்- ஒழுங்கு கெடாத வகையில் விளம்பரங்கள் குறித்த செயல்பாடுகளுக்கென தனிச் சட்டம் கொண்டு வரவேண்டும் என்றார்.
தொடர்ந்து திருப்பரங்குன்றத்தில் தேசிய கல்விக் கொள்கை சனாதனக் கல்விக் கொள்கையே என்ற தலைப்பில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பங்கேற்ற தொல். திருமாவளவன்  சிறப்புரையாற்றினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com