மதுரை நகரில் 8 நீர்நிலைகளை ரூ.1.04 கோடியில் தூர்வாரும் பணி: மாநகராட்சி-ஹைடெக் அராய் நிறுவனம் ஒப்பந்தம்
By DIN | Published On : 19th September 2019 08:08 AM | Last Updated : 19th September 2019 08:08 AM | அ+அ அ- |

மதுரையில் 8 நீர்நிலைகளை ரூ.1.04 கோடி மதிப்பில் தூர்வாருவதற்கு தானம் அறக்கட்டளை மற்றும் ஹைடெக் அராய் நிறுவனம் சார்பில் மாநகராட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
மதுரை மாநகராட்சி தமுக்கம் கலையரங்கத்தில் நடைபெற்ற மதுரை கூடலரங்கம் நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ச.விசாகன் தலைமை வகித்துப் பேசியது: முல்லைபெரியாறு அணை 1895 இல் கட்டப்பட்டது. வைகை அணை 1959-இல் கட்டப்பட்டது. இந்த இரண்டு அணைகளும் கட்டப்படுவதற்கு முன்பாகவே மதுரை தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத நகரமாக விளங்கியுள்ளது. மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் செழிப்புடன் இருந்து வந்துள்ளது.
இதற்கு காரணம் நம் முன்னோர் பின்பற்றிய மழை நீர் சேகரிப்பு. அணைகள் இல்லாத காலத்தில் கண்மாய்கள், ஊருணிகள், குளங்கள், குட்டைகளில் மழை நீரை சேகரித்து வைத்துள்ளனர். இதனால் கோடைக்காலங்களில் கூட தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத நிலை இருந்து வந்துள்ளது. ஆனால் தற்போது நீர்நிலைகள் பெருமளவு அழிந்ததால் மழை நீரை சேகரிக்க வழியில்லை.
மதுரையில் கண்மாய்கள், ஊருணிகள் உள்பட 89 நீர்நிலைகள் உள்ளன. இதில் 34 நீர்நிலைகள் மாநகராட்சிக்கும், 5 நீர்நிலைகள் இந்து சமய அறநிலையத்துறைக்கும், 50 நீர்நிலைகள் பொதுப்பணித்துறைக்கும் சொந்தமானது.
மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 34 நீர்நிலைகளில் கோசாகுளம் ஊருணி மாநகராட்சியால் தூர்வாரப்பட்டு ஊருணியைச் சுற்றி மரக்கன்றுகளும், மழைநீரை சேமித்து வைப்பதற்கான கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டு முன்னுதாரண ஊருணியாக மாற்றப்பட்டுள்ளது. இதர 33 நீர்நிலைகளை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் சிலையனேரி ஊருணி, மிளகரணை ஊருணி, கோட்டங்குளம் ஊருணி, பாலூரணி, கம்பன் ஊருணி, உத்தங்குடி ஊருணி, கல்லுடையான் ஊருணி, செம்பணூருணி, முத்துப்பட்டி களத்தார் ஊருணி, சூறாவளிமேடு ஊருணி ஆகிய 8 ஊருணிகளை தானம் அறக்கட்டளை மற்றும் ஹைடெக் அராய் நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் ரூ.1.04 கோடி மதிப்பீட்டில் தூர்வாருவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முன் மாதிரியாக வைத்து இதர ஊருணிகளையும் தூர்வாருவதற்கு மதுரையைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் சமூக பங்களிப்புத் திட்டத்தின்கீழ் உதவ முன்வர வேண்டும் என்றார்.
இதைத்தொடர்ந்து ஹைடெக் அராய் நிறுவன மேலாண்மை இயக்குநர் பி.டி.பங்கேரா மற்றும் மாநகராட்சி ஆணையர் ச.விசாகன் ஆகியோர் ஊருணிகளை தூர்வாரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.