மதுரை கோட்டத்தில் ரயில்வே "டி' பிரிவுப் பணிகளுக்கு 90% வடமாநிலத்தவர்கள் தேர்வு: தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில்,

பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், அண்மையில் வெளியாகியுள்ள தெற்கு ரயில்வே மதுரை கோட்ட "டி' பிரிவு பணிகளுக்கு தேர்வாகியுள்ளவர்களில் 90 சதவீதம் பேர் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பது ரயில்வே பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் மீதான நம்பகத்தன்மையை இழக்கச் செய்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அண்மையில் தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்தில் 1,765 தொழில் பழகுநர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதில் எலக்ட்ரிஷியன், பிட்டர், மெக்கானிக், வெல்டர் உள்ளிட்டப் பணிகளுக்கு ஆள்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் 1600 பேர் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களே தேர்வு செய்யப்பட்டனர். 
இதையடுத்து தெற்கு ரயில்வே நிர்வாகம் தமிழகத்தில் அனைத்து நிலை ரயில்வே ஊழியர்கள் தேர்விலும் வடமாநிலத்தவருக்கு முக்கியத்துவம் அளிப்பதாக புகார்கள் எழுந்தன. 
இந்நிலையில் தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்திற்கு (குரூப்) "டி' பிரிவில் மின் ஊழியர்கள், சிக்னல் மேன், டிராக் மேன், கேட் கீப்பர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு 2018 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இதில் ரயில்வே பணியாளர்கள் தேர்வு வாரியம் 624 ஊழியர்களை தேர்வு செய்துள்ளது. அதில் 90 சதவீதம் பேர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 10 சதவீதம் பேர் மட்டுமே. 
இதுமட்டுமில்லாமல், முன்னாள் ராணுவ வீரர்களை, ரயில்வே பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளுக்கு அமர்த்துகின்றனர். மேலும் ஓய்வுபெற்ற லோகோ பைலட்களை மீண்டும் பணியமர்த்தி வருகின்றனர். ரயில்வே பணிகளுக்கு ஆள்கள் தேர்வு செய்யப்பட வெளியாகும் அறிவிப்புகள் கூட முறையாக இருப்பதில்லை. இதனால் ரயில்வே பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் மீது நம்பகத்தன்மை குறைந்துள்ளது.
மேலும் தமிழக இளைஞர்கள் ரயில்வே துறையில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதற்கு  முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்பில், அந்தந்த மாநிலத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என குஜராத், மத்தியப் பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் தனிச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதேபோல தமிழகத்திலும் சட்டம் இயற்றினால்தான், பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் நிலை உள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது:
ரயில்வே குரூப் "டி' பிரிவில் உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கக் கல்வித் தகுதி 10 மற்றும் ஐடிஐ போதுமானதாக உள்ளன. இதற்கு மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் ரயில்வே பணிகளில் சேர ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக மீனா என்ற எஸ்.டி. வகுப்பைச் சேர்ந்த இளைஞர்கள் அதிகளவில் ரயில்வே பணிகளுக்கு முயற்சிக்கின்றனர். இதையடுத்து கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அதிகளவில் ரயில்வே பணிகளுக்கு முயற்சி செய்கின்றனர். ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் ரயில்வே தேர்வுகளில் பங்கேற்பதே இல்லை. இதுவே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக தேர்வாகாமல் இருப்பதற்கு காரணம். மற்றபடி, ரயில்வே பணியாளர்கள் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வில் எந்த முறைகேடும் நடக்க வாய்ப்பு இல்லை. 
ரயில்வே பாதுகாப்பு மற்றும் லோகோ பைலட் உள்ளிட்டப் பணிகளுக்கு ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்கள் மீண்டும் தற்காலிகமாகப் பணியில் அமர்த்தப்படுவது உண்மைதான். இதனால் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பாதிக்காது. புதிதாக ஆள்கள் தேர்வு செய்யப்படவுடன், ஓய்வுபெற்றவர்கள் விலகிக் கொள்வார்கள் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com