செல்லூர் கண்மாய் குடிமராமத்துப் பணி: முன்கூட்டியே பணம் வழங்க முயற்சிப்பதாக புகார்

செல்லூர் கண்மாயில் குடிமராமத்துப் பணி முழுமையாக முடியாத நிலையில், பாதிக்கும் மேற்பட்ட தொகையை

செல்லூர் கண்மாயில் குடிமராமத்துப் பணி முழுமையாக முடியாத நிலையில், பாதிக்கும் மேற்பட்ட தொகையை ஒப்பந்ததாரருக்கு வழங்க முயற்சிப்பதாக, பொதுப்பணித் துறையினர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
செல்லூர் கண்மாய் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் எம்.பி.சங்கரபாண்டியன் தலைமையில் அப் பகுதியைச் சேர்ந்தோர் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
அதன் விவரம்: குடிமராமத்துத் திட்டத்தில்  செல்லூர் கண்மாயைப் புனரமைப்பதற்கு ரூ.48 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 6-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் பணியை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட பணியில் 30 சதவீதம் கூட முடிவடையாத நிலையில் தற்போது மழை தொடங்கிவிட்டது.
இக்கண்மாயில் பணிகள் பெயரளவுக்கே செய்யப்பட்டுள்ளன. கண்மாயின் அதிகப் பரப்புக்கு தூர்வாரி மழைநீரைச் சேகரித்தால் மட்டுமே இப் பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் உயரும். அதோடு கண்மாயில் மீனாட்சிபுரம் வருமானவரி குடியிருப்பு பகுதியில் தொடங்கி செல்லூர் தாகூர் நகர் வரை கரையைப் பலப்படுத்த வேண்டும். மேலும் பல இடங்களில் கழிவுநீர் கலக்கவிடப்படுகிறது. அதைத் தடுப்பதும் அவசியமானது.  இந்நிலையில், பொதுப்பணித் துறையினர் செல்லூர் கண்மாய் பணி தொடர்பாக எவ்வித விவரங்களையும் கூறாமல் பல முறை கையெழுத்துப் பெற்றுள்ளனர். இந்நிலையில், ஒப்பந்ததாரருக்கு தொகை வழங்குவதற்காக என்னிடம் கையெழுத்துப் பெற முயற்சிக்கின்றனர்.  ஆனால், 30 சதவீத பணிகள் கூட முழுமை பெறாத நிலையில் கையெழுத்திட மறுத்துவிட்டேன்.
இந்த பணிகளை முழுமையாக முடிக்கவும், அதன் பிறகு நேரடியாக ஆய்வு செய்து பணிக்கான தொகையை ஒப்பந்ததாரருக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com