"தமிழகத்தில் விரைவில் இல்லம்தோறும் இணையம்'

தமிழகத்தில் இல்லம் தோறும் இணையம் என்ற திட்டம் விரைவில் மத்திய அரசின் உதவியோடு செயல்படுத்தப்பட உள்ளது

தமிழகத்தில் இல்லம் தோறும் இணையம் என்ற திட்டம் விரைவில் மத்திய அரசின் உதவியோடு செயல்படுத்தப்பட உள்ளது என வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும்  தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.    
கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று வந்த முதல்வருக்கு பாராட்டுக் கூட்டம் ஆகியன திருமங்கலத்தை அடுத்த கப்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் சங்க நிர்வாகி சங்கர் தலைமை வகித்தார். 
கூட்டத்தில் அமைச்சர் பேசியது: தமிழகத்தில் ரூ.4, 200 கோடியில், ஊராட்சிகள் வாரியாக இல்லம் தோறும் இணையம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஊராட்சிகளில் 14 ஆயிரத்து 645 கிராம சேவை மைய கட்டடங்கள் தயார் நிலையில் உள்ளன. இது மத்திய அரசின் நிதி உதவியுடன் நடைபெறுகிறது. இதற்காக ரூ.2,500 கோடியை முதல் தவணையாக மத்திய அரசு தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. 
இதன்மூலம் அனைத்து ஊராட்சிகளிலும் "பாரத் நெட் ஒர்க்' என்ற இணையத்தின் மூலம் கிராம மக்களுக்கு தேவையான இணைய சேவைகள் அளிக்கப்படவுள்ளன. மேலும் இதன் மூலம், அரசு கேபிள் டிவி சேவை நவீன தொழில்நுட்பத்தின் மூலம்  ஒளிபரப்ப  நடவடிக்கை எடுக்கப்படும். அரசு கேபிள் டிவியையும், அரசு கேபிள் ஆப்ரேட்டர்களையும் காப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார். 
இதில் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com