குடிமராமத்துப் பணிகளில் முறைகேடு: ஆட்சியர் தலைமையிலான உயர்நிலைக் குழு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

குடிமராமத்துப் பணிகளில் முறைகேடுகள் தொடருவதால், ஆட்சியர் தலைமையில் உயர்நிலைக் குழு நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

குடிமராமத்துப் பணிகளில் முறைகேடுகள் தொடருவதால், ஆட்சியர் தலைமையில் உயர்நிலைக் குழு நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
 மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் த.சு.ராஜசேகர் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், வேளாண் இணை இயக்குநர்  இளங்கோ, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  குடிமராமத்துப் பணி தொடர்பாக விவசாயிகள் பலரும் புகார் தெரிவித்துப் பேசினர். மதுரை மாவட்டத்தில் குடிமராமத்துப் பணி நடைபெற்ற கண்மாய்களில்,  நிர்ணயிக்கப்பட்ட பணிகளுக்கும் தற்போது நடந்து முடிந்துள்ள பணிகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது. எந்த கண்மாயிலும் முழுமையாகப் பணி நடைபெறவில்லை.
 மாறாக,  கண்மாயில் இருந்து எடுக்கப்பட்ட மண் வணிக நோக்கில் விற்பனை செய்வது,  கரையையொட்டிய பகுதிகளை மட்டுமே ஆழப்படுத்துவது என பணிகள் முறையாக நடைபெறவில்லை.  அரசியல் தலையீடு காரணமாக நீரினைப் பயன்படுத்துவோர் சங்க உறுப்பினர்கள் தேர்வும் முறையாக நடைபெறவில்லை. இதனால், பொதுப்பணித் துறையினர் தங்களது விருப்பம்போல பணிகளைச் செய்து வருகின்றனர்.
 மேலூர், கொட்டாம்பட்டி பகுதிகளில் நீண்டநாள்களுக்குப் பிறகு தற்போது தான் மழை பெய்து வருகிறது. இப் பகுதி கண்மாய்களில் ஓரளவுக்குத் தண்ணீர் வந்துள்ளது.  உதினிப்பட்டி கண்மாயில் பாதி அளவுக்கு மேல் தண்ணீர் இருக்கும் நிலையில், அங்கு குடிமராமத்து பணியைச் செய்ய முயற்சிக்கின்றனர். பணி நடந்தால், இருக்கும் தண்ணீரும் வீணாகிவிடும்.  கட்டையம்பட்டி கண்மாயில்,  குடிமராமத்து பணி என்ற பெயரில் ஏராளமான மரங்கள் வெட்டி விற்பனை செய்யப்பட்டுள்ளன.
 சில இடங்களில் பணிகள் நல்ல முறையில் நடந்திருந்தாலும், பெரும்பாலான இடங்களில் குடிமராமத்துப் பணி முறையாக நடைபெறவில்லை. அதேபோல,  கண்மாய்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் குறித்து பல முறை புகார் கொடுத்தும், பொதுப்பணித் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. பல கண்மாய்களில் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமித்து விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
 ஆகவே, மதுரை மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் நடைபெற்றுள்ள கண்மாய்களை ஆட்சியர் தலைமையிலான உயர் அதிகாரிகள் குழுவினர் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும்.  மதிப்பீடு செய்யப்பட்ட பணிகள்,  முறையாகச் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்த பிறகே ஒப்பந்ததாரர்களுக்குப் பணம் வழங்க அனுமதிக்க வேண்டும் என்றனர். மேலூர் ஒருபோக சாகுபடி பகுதி பாசனத்துக்குத் தண்ணீர் திறப்பது,  பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் பலருக்கும் காப்பீட்டுத் தொகை கிடைக்காதது, கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் தெரிவித்தனர். கண்மாய்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். குடிமராமத்துப் பணி குறித்து விவசாயிகளை நேரடியாக அழைத்துச் சென்று காண்பிக்கப்பட்டுள்ளது. பணிகள் சிறப்பாக நடந்துள்ளதாக விவசாயிகள் பலரும் கூறியுள்ளனர் எனப் பொதுப்பணித் துறை அதிகாரிகள் பதில் அளித்தனர்.
 பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளில் மதுரை மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் பேருக்கு காப்பீட்டுத் தொகை வழங்குவதில் விடுபட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் விடுபட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
 ஒருபோக சாகுபடி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக அரசுக்குப் பரிந்துரை அனுப்பி அனுமதி பெறப்படும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.
  தோட்டக்கலைத் துறை சார்பில் பயனாளிகள் 12 பேருக்கு ரூ.80 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com