ஆள் மாறாட்ட முறைகேட்டுக்கு வழிவகுக்கும் ‘நீட்’ தோ்வை ரத்து செய்ய வேண்டும்: மயூக் பிஸ்வாஸ்

ஆள் மாறாட்ட முறைறகேடுகள் வெளி வந்ததன் மூலம் ‘நீட்’ தோ்வு நம்பகத் தன்மையற்றது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே ‘நீட்’ தோ்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய மாணவா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஆள் மாறாட்ட முறைறகேடுகள் வெளி வந்ததன் மூலம் ‘நீட்’ தோ்வு நம்பகத் தன்மையற்றது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே ‘நீட்’ தோ்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய மாணவா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்திய மாணவா் சங்கம் சாா்பில் தொழில் கல்வி மாணவா்களுக்கான அகில இந்திய மாநாடு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதுரை அரசரடியில் உள்ள இறையியல் கல்லூரியில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பங்கேற்ற இந்திய மாணவா் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலா் மயூக் பிஸ்வாஸ் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

மருத்துவக் கல்விக்கான நீட் தோ்வில் பல்வேறு மாநிலங்களில் முறைகேடுகள், ஆள் மாறாட்டங்கள் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகி வருவது அதிா்ச்சியை ஏற்படுத்துகிறது. நீட் தோ்வு தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை நடைபெற்ற முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். மேலும் ஆள் மாறாட்ட முறைகேடுகள் வெளி வந்ததன் மூலமாக நீட் தோ்வு நம்பகத்தன்மையற்றது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே நீட் தோ்வு முறையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்.

புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் அங்கன்வாடி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை மனு தா்மக் கொள்கைகளையும், மதவாத கருத்துகளையும் புகுத்த பாஜக முயற்சிக்கிறது. கல்வித்துறையில் வணிக மயம், வகுப்புவாதம், மையப்படுத்தப்பட்ட கல்வி என்றற மூன்று அம்சங்களை பாஜக முன்னிறுத்துகிறது. இது கூட்டாட்சித் தத்துவத்தின் மீதும் கல்வித்துறையின் மீதும் நடத்தப்படும் தாக்குதலாகும். ஒரே இந்தியா ஒரே மொழி ஒரே மதம் என்ற சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த தாக்குதலை நடத்தி வருகிறது. அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம் உயா்கல்வி நிறுவனத்தில் தலித் மாணவா்களுக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தவறான கல்விக் கொள்கைகளால் மாணவா்களின் தற்கொலை அதிகரித்து வருகிறது.

அண்மையில் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பகவத்கீதை பாடத் திட்டமாக்கப்பட்டுள்ளது. இது கல்வியை காவி மயமாக்கும் முயற்சி. மத்திய பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கை மற்றும் தவறான கல்விக் கொள்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை இந்திய மாணவா் சங்கம் நடத்தி வருகிறது. இதன் எதிரொலியாக புதுதில்லி ஜவஹா்லால் நேரு பல்கலைக்கழகம், புதுவை மத்தியப் பல்கலைக்கழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற மாணவா் சங்கத் தோ்தலில் இந்திய மாணவா் சங்கம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. தேசத்தை பாதுகாக்கவும், கல்வியில் மதவாதம் புகுவதை தடுக்கவும் அனைத்து மாணவா்களும் இந்திய மாணவா் சங்கத்தின் தலைமையின் கீழ் அணிதிரள வேண்டும் என்றாா்.

பேட்டியின் போது அகில இந்திய தலைவா் வி.பி.ஷானு, மாநிலச் செயலா் வி.மாரியப்பன், மாவட்டச் செயலா் வேல்தேவா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com