இருதய நோய்க்கு விரைவில் உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையர்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருதய நோய்க்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை விரைவில் அளிக்கப்படும் என, முதன்மையர் கே. வனிதா தெரிவித்தார்.


மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருதய நோய்க்கு உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை விரைவில் அளிக்கப்படும் என, முதன்மையர் கே. வனிதா தெரிவித்தார்.
உலக இருதய தினத்தை முன்னிட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கூட்ட அரங்கில் சனிக்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் பங்கேற்ற மருத்துவ மாணவர்கள் மற்றும் செவிலியர் பயிற்சி மாணவர்கள் ஆகியோருக்கு, இருதயத்தை பாதுகாப்பது குறித்த பல்வேறு வழிமுறைகளை மருத்துவப் பேராசிரியர்கள் தெரிவித்தனர். 
கருத்தரங்கில், மருத்துவமனை முதன்மையர் கே. வனிதா பேசியது: இருதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் உரிய சிகிச்சை மூலம் ஆரோக்கியமாக வாழ முடியும். அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு இருதய நோய் பாதிக்கப்பட்டு எந்த நிலையில் நோயாளிகள் வந்தாலும், உரிய சிகிச்சை அளித்து அவர்களைக் காப்பாற்றக்கூடிய அனைத்து வசதிகளும் உள்ளன. 
இங்கு, இருதயவியல் துறை மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. புதிதாகக் கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த அறுவைச் சிகிச்சை மைய கட்டடத்தில், இருதயவியல் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இதன்மூலம், தென் மாவட்ட மக்கள் உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை பெறமுடியும் என்றார்.
மருத்துவக் கண்காணிப்பாளர் ஜெ. சங்குமணி பேசியதாவது: இருதய நோய்கள் அதிகரித்து வரும் நிலையில், இருதயத்தை பாதுகாத்துக் கொள்வது குறித்து மாணவர்கள் அறிந்து கொள்வதற்கு, இதுபோன்ற கருத்தரங்கம் அவசியமானது. இருதய நோய் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றவும், உடற்பயிற்சி செய்யவும் மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள்.
ஆனால், அதுமட்டும் போதாது. நகைச்சுவை உணர்வுடன் இருக்கவேண்டும். நகைச்சுவை உணர்வினால் கோபம், மன அழுத்தம் குறைந்து, உடல் உறுப்புகள் சீராகச் செயல்படும், இதன்மூலம் இருதயம் ஆரோக்கியமாக இருக்கும் என்றார். 
இதில், இருதய அறுவைச் சிகிச்சைப் பிரிவு தலைவர் ஏ. ரத்னவேல், மருத்துவர் எஸ். பாலசுப்பிரமணியன், கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் ரா. சொக்கலிங்கம்  உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com