கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் 28 ஆவது பட்டமளிப்பு விழா: 9,726 பேருக்கு பட்டம் வழங்கினார் தமிழக ஆளுநர்

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் 28-ஆவது பட்டமளிப்பு விழா மதுரை கீழக்குயில்குடியில் உள்ள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.


கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் 28-ஆவது பட்டமளிப்பு விழா மதுரை கீழக்குயில்குடியில் உள்ள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மொத்தம் 9,726 பேருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பட்டங்களை வழங்கினார்.
இந்த விழாவில் பங்கேற்று, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்யநாராயணா பேசியது: 
பெண்களின் கல்வி வளர்ச்சி மற்றும் திறமையினால் சமூகம் பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது. தற்போது, மூன்றில் ஒரு பங்கு உள்ளாட்சியில் பெண்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. பெண்களுக்கு சரியான வயதில் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. பெண்கள் உயர் கல்வியால் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.
இவ்வாறு பெண்களின் நிலையை மேம்படுத்தினால்தான் உலகம் உண்மையான வளர்ச்சியை அடையும். பெண்களுக்கான உரிமை, கல்வி, அதிகாரம் உள்ளிட்டவை தடையில்லாமல் கிடைத்தால்தான், மனிதகுலம் முழுமையாக மேம்படும்.
இன்று பட்டம் பெற்றுள்ள மாணவிகள் தன்னம்பிக்கை, தைரியம், நம்பிக்கையுடன் மகிழ்ச்சியான எதிர்காலத்தை நோக்கிச் செல்ல வேண்டும். பெண்கள் வாழ்நாள் முழுவதும் கற்க வேண்டும். பட்டம் பெற்றவுடன் படிப்பு முடிந்துவிட்டது என நினைக்க வேண்டாம். கல்வி என்பது முடிவற்ற பயணமாகும், அதில் பெண்கள் பெரிய லட்சியங்களுடன் பயணிக்க வேண்டும். அந்த பயணத்தில் வெற்றிபெற வேண்டும் என்றால், கடினமாக உழைக்க வேண்டும் என்றார்.
தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பேசியது: தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். இங்கு, பட்டம் பெற்ற மாணவிகளும் பல சாதனைகளைப் புரியவேண்டும். 
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வைதேகி விஜயகுமார், உயர்கல்வி பெற்றுள்ள பெண்களின் சதவீதம் 45.6 என்று குறிப்பிட்டார். இது கடந்த ஆண்டுக்கான புள்ளி விவரம். தற்போது, உயர்கல்வி பயிலும் பெண்களின் சதவீதம் 48.3 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டுக்குப் பின்னர், தமிழகத்தில் 82 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால், இந்திய அளவில் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. இதுமட்டுமல்லாது, முனைவர் பட்டம் பெறுவதிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் உள்ளனர். உயர்கல்வி மேம்பாட்டுக்காக தமிழக அரசு  தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்றார்.
முன்னதாக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதில், இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டம் என மொத்தம் 9,726 பேர் பட்டம் பெற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com