புதிய தொழில் முதலீடுகளை தென்மாவட்டங்களுக்கு கொண்டுவர முயற்சி: வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

புதிய தொழில் முதலீடுகளை தென்மாவட்டங்களுக்கு கொண்டுவர முழு முயற்சி மேற்கொள்ளப்படும் என்று, வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.


புதிய தொழில் முதலீடுகளை தென்மாவட்டங்களுக்கு கொண்டுவர முழு முயற்சி மேற்கொள்ளப்படும் என்று, வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 95-ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், சங்கத்தின் முன்னாள் தலைவர்களான வி.வி.எஸ். யோகன், எஸ். ரத்தினவேலு, நீதிமோகன், சுசி ஜெயபாலன் ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கி கெளரவித்து பேசியதாவது:
தமிழக முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தின் மூலமாக பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம், ரூ. 8 ஆயிரம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. சுமார் 35 ஆயிரம் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. புதிய முதலீடுகள் வருவதற்கும், தொழில் தொடங்குவதற்கும் ஏற்ற மாநிலமாக தமிழகம் இருக்கிறது. முதலீட்டாளர்களுக்கு தமிழக அரசு வழங்கும் பல்வேறு சலுகைகள் காரணமாக, தொழில் தொடங்க ஆர்வமாக இருக்கின்றனர். 
அதேநேரம், தென்மாவட்டங்களில் புதிய தொழில்கள் தொடங்குவதற்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதனடிப்படையில், வெளிநாட்டு முதலீடுகள் தென்மாவட்டங்களுக்கு கிடைக்க, தொழில் அமைப்புகளின் கோரிக்கைகள் தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முன்னதாக, தமிழ்நாடு தொழில் வர்த்த சங்கம் சார்பில், தென்மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கான கோரிக்கைகள் அடங்கிய மனு அமைச்சரிடம் வழங்கப்பட்டது. மேலும், மதுரை விமான நிலையத்துக்கு சர்வதேச விமானங்கள் வந்து செல்வதற்கான நடவடிக்கை, சென்னை - தூத்துக்குடி தொழில் வழிச் சாலை திட்டத்தை வேகப்படுத்துவது, மதுரையில் தொழிற்காட்சிக் கூடம் அமைப்பதற்கு அனுமதி அளிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில்,  சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.எஸ். சரவணன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் முதுநிலைத் தலைவர் எஸ். ரத்தினவேலு, தலைவர் என். ஜெகதீசன் உள்பட பலர் பேசினர்.
புதிய நிர்வாகிகள் தேர்வு: ஆண்டு விழாவை தொடர்ந்து நடைபெற்ற சங்கத்தின் பொதுக் குழு கூட்டத்தில், 2019-2020 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.  நிர்வாகிகள் விவரம்: தலைவர் - என்.ஜெகதீசன், செயலர் -ஜெ.செல்வம், பொருளாளர் - ஆர்.பிரபாகரன், துணைத் தலைவர்கள் - டி.தனுஷ்கோடி, பா.ரமேஷ், ஜீயர் பாபு, இணைச் செயலர்கள் - ஜி.கணேசன், எல்.ஸ்ரீதர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com