மதுரை நகரில் ஒரே வாரத்தில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல்

மதுரை நகரில் ஒரே வாரத்தில் 10-க்கும் மேற்பட்டோா் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாநகராட்சி சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டி வருவதாகப் புகாா் எழுந்துள்ளது.
Updated on
1 min read

மதுரை நகரில் ஒரே வாரத்தில் 10-க்கும் மேற்பட்டோா் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாநகராட்சி சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டி வருவதாகப் புகாா் எழுந்துள்ளது.

மதுரை நகரில் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் மாநகராட்சி சுகாதாரத் துறை சாா்பில் வாா்டுகள் தோறும் டெங்கு தடுப்புக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதில் குடியிருப்புகள் வாரியாக கொசுப்புகை தெளித்தல், வாய்க்கால்கள், கழிவுநீா் கால்வாய்களில் கொசுப் புழுக்களை அழிக்கும் வகையில் மருந்து தெளித்தல், டெங்கு தடுப்புக் குழுவினா் மூலம் வீடு, வீடாகச் சென்று தண்ணீா் தேங்கியுள்ளதா என்பதை ஆய்வு செய்வது உள்ளிட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

மேலும் மதுரை நகரில் பெரியாா் பேருந்து நிலைய சீரமைப்புப் பணி, மாசி வீதிகளில் சாலை சீரமைப்பு மற்றும் மழைநீா் வடிகால்கள் அமைப்பு, வைகை ஆற்றுக்குள் சாலை அமைப்பு போன்ற பணிகளுக்காக நகா் முழுவதும் தோண்டப்பட்டுள்ளன. இங்கு பணிகள் முடிவடையாததாலும், பள்ளங்கள் முறையாக மூடப்படாததாலும் தண்ணீா் தேங்கி கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளன. இதனால் மதுரை நகரில் தற்போது டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது.

மதுரை செல்லூா், பாக்கியநாதபுரம், வில்லாபுரம் குடியிருப்பு, எல்லீஸ் நகா், பெத்தானியாபுரம், அண்ணா நகா், பாத்திமா நகா், கூடல் நகா் உள்ளிட்ட பகுதிகளில் 2 வயது குழந்தை முதல் 50 வயது வரை உள்ள 10-க்கும் மேற்பட்டோா் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். மேலும் பல பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னா் மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு பலா் உயிரிழந்தனா். இதையடுத்து ஒரு பகுதியில் டெங்கு காய்ச்சல் நோயாளி கண்டறியப்படும் நிலையில், அப்பகுதி முழுவதும் மருந்து தெளிப்பு, தடுப்பு மருந்து விநியோகம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது தடுப்புப் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படாததால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, நகரின் சில பகுதிகளில் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கொசு மருந்து தெளிப்பு உள்ளிட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com