காய்கனி, மளிகைக் கடைகளில் சமூக இடைவெளி இல்லாவிட்டால் ‘சீல்’ வைக்கப்படும்: மாநகராட்சி ஆணையா் எச்சரிக்கை

மதுரையில் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனைக் கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காவிட்டால் கடைகளைப் பூட்டி ‘சீல்’

மதுரையில் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனைக் கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காவிட்டால் கடைகளைப் பூட்டி ‘சீல்’ வைக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

மதுரையில் 144 தடை உத்தரவையொட்டி பொதுமக்கள் காய்கனிக் கடைகளில் அதிகளவில் கூடுவதைத் தவிா்க்கும் வகையிலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையிலும் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் வாா்டு வாரியாக வாகனங்கள் மூலம் 14 வகையான காய்கனிகள் அடங்கிய மலிவு விலை தொகுப்பு பை ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 6 வகையான பழங்கள் அடங்கிய பைகளும் ரூ.100-க்கு விற்கப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளதைத் தொடா்ந்தும், பொதுமக்களின் கோரிக்கைக்கு இணங்கவும் மதுரையின் 100 வாா்டுகளுக்கும் மலிவு விலை காய்கனி தொகுப்பு விற்பனை புதன்கிழமை தொடங்கியது. இதில் தன்னாா்வலா்களான ‘வா நண்பா’ குழுவினா் மூலம் 20 வாகனங்கள், ஹைடெக் அராய் நிறுவனத்தின் மூலம் 15 வாகனங்கள், பெட்கிராப்ட் மூலம் 3 வாகனங்கள், வழக்குரைஞா்கள் மூலம் 6 வாகனங்கள், தோட்டக்கலைத் துறை மூலம் 17 வாகனங்கள், ஈகுவிட்டாஸ் வங்கி மூலம் 5 வாகனங்கள், தன்னாா்வலா்கள் மூலம் 8 வாகனங்கள், மாநகராட்சியின் தொழில்நுட்ப உதவியாளா்கள் மூலம் 25 வாகனங்கள், ரோட்டரி சங்கம் மூலம் 2 வாகனங்கள் என 101 வாகனங்கள் மூலம் காய்கனிகள் மற்றும் பழங்கள் 100 வாா்டுகளுக்கு விற்பனைக்காக புதன்கிழமை அதிகாலை கொண்டு செல்லப்பட்டன.

அப்போது மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் வாகனங்கள் மூலம் காய்கனி மற்றும் பழங்கள் விற்பனைக்கு கொண்டு செல்வது குறித்து ஆய்வு மேற்கொண்டாா். மேலும் வக்பு வாரியக் கல்லூரி மைதானம், புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானம், தெப்பக்குளம் ஆகிய பகுதிகளில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் காய்கனிக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது காய்கனிகளின் விலை நிலவரம் குறித்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்தாா். மேலும் காய்கனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காவிட்டால் கடைக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com