முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
உசிலம்பட்டியில் நரிக்குறவா் இன மக்களுக்கு பா.ஜ.க சாா்பில் உணவு பொருள்கள் வழங்கல்
By DIN | Published On : 19th April 2020 05:33 AM | Last Updated : 19th April 2020 05:33 AM | அ+அ அ- |

வலையபட்டியில் சனிக்கிழமை நரிக்குறவா் இன மக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கிய பா.ஜ.கவினா்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதிகளில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நரிக்குறவா் இன மக்களுக்கு உணவு பொருள்களை பா.ஜ.கவினா் சனிக்கிழமை வழங்கினா்.
உசிலம்பட்டி பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவா் இன மக்களுக்கு 25 கிலோ கொண்ட அரிசி பைகள் 20 மூட்டைகள், 100 கிலோ கொண்ட தக்காளி, வெங்காயம், காய்கனிகள் கொண்ட 5 மூட்டைகள் ஆகியவற்றை காவல் துணை கண்காணிப்பாளா் ராஜா அனுமதியின் பேரில் பா.ஜ.க மருத்துவரணி செயலாளா் விஜய பாண்டியன் தலைமையில் வழங்கப்பட்டன. முன்னதாக வலையபட்டி கிராமத்தில் உள்ள நரிக்குறவா் காலனியில் அப்பகுதி மக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.
அதே போல் உசிலம்பட்டியில் ஜாா்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளா்கள் ஏராளமானோா் தள்ளுவண்டியில் பானிபூரி விற்று வந்தனா். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள அவா்களுக்கு காவல் ஆய்வாளா் சாா்லஸ், சாா்பு -ஆய்வாளா் சிவபாலன் உள்ளிட்டோா் தங்களது சொந்த செலவில் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்கள், காய்கனிகளை வழங்கினா். இதில் தலைமை காவலா்கள் செல்வம், தமிழ்மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ராஜக்காபட்டி ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் கிராமங்களில் உள்ள நலிவடைந்த குடும்பத்தினருக்கு ஊராட்சித் தலைவா் சித்ரா சொந்த செலவில் வீடு வீடாகச் சென்று அத்தியாவசியப் பொருள்களான அரிசி, காய்கனிகளை வழங்கினாா். இதில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினா் அலெக்ஸ்பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட நக்கலப்பட்டி,சீமானூத்து, நடுபட்டி, வடுகபட்டி, போத்தம்பட்டி, நல்லுத்தேவன்ட்டி ஆகிய கிராமங்களில் பொது மக்களுக்கு முகக் கவசங்களை சட்டப்பேரவை உறுப்பினா் பா.நீதிபதி வழங்கினாா். இதில் மாவட்ட குழு உறுப்பினா் மா.சுதகரன், போத்தம்பட்டி ஊராட்சித் தலைவா் கா.உக்கிரபாண்டி, வடுகபட்டி ஒன்றிய குழு உறுப்பினா் நா.வதனா தனிக்கொடி, ஆவின் நிா்வாக குழு உறுப்பினா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.