முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
மதுரை மாவட்டத்துக்கு 1000 ‘ரேபிட் கிட்’ : ஆட்சியா் தகவல்
By DIN | Published On : 19th April 2020 05:36 AM | Last Updated : 19th April 2020 05:36 AM | அ+அ அ- |

1345mdurap080817
மதுரை மாவட்டத்துக்கு 1000 கரோனா துரித பரிசோதனை உபகரணம் (ரேபிட் டெஸ்ட் கிட்) பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் தெரிவித்தாா்.
கரோனா வைரஸ் தொற்று இருப்பதை உறுதி செய்வதற்கான ரேபிட் டெஸ்ட் கிட் மதுரை மாவட்டத்துக்கு ஆயிரம் உபகரணங்கள் பெறப்பட்டுள்ளன. இதையடுத்து அண்ணா நகரில் உள்ள மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இதைப் பயன்படுத்தி கரோனா பரிசோதனை சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய், மாநகராட்சி ஆணையா் ச.விசாகன், மாநகரக் காவல் துணை ஆணையா் காா்த்திக் ஆகியோா் இப் பரிசோதனையைப் பாா்வையிட்டனா்.
பின்னா் செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியது:
கரோனா வைரஸ் தொற்று பரிசோதனைக்காக தமிழக அரசால் மதுரை மாவட்டத்துக்கு 1000 துரித பரிசோதனை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆா்) மற்றும் சுகாதாரத் துறை வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி, தேவைப்படும் பகுதிகளில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இவை பயன்படுத்தப்படும்.
மதுரை மாவட்டத்தில் முதல்கட்டமாக, கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தினமும் பணியாற்றி வரும் சுகாதாரப் பணியாளா்கள், காவல் துறையினருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
தற்போது சுகாதாரப் பணியாளா்கள், காவல் துறையினருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. ஒவ்வொரு ரத்த மாதிரி பரிசோதனை செய்து 15 நிமிடங்களில் முடிவுகள் தெரியவரும். பரிசோதனை செய்தவா்களில் தற்போது வரை யாருக்கும் கரோனா வைரஸ் தொற்று இல்லை. தேவைப்படும் இடங்களில் துரித பரிசோதனை உபகரணம் பயன்படுத்தப்படும் என்றாா்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையா் ஜெ.சங்குமணி, சுகாதாரத் துறை துணை இயக்குநா் பிரியா ராஜ் ஆகியோா் உடன் இருந்தனா்.