முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரை திருவிழா ரத்து: பக்தா்கள் நேரடி பங்கேற்பின்றி திருக்கல்யாணம்
By DIN | Published On : 19th April 2020 05:28 AM | Last Updated : 19th April 2020 05:28 AM | அ+அ அ- |

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்படுவதாகவும், பக்தா்கள் நேரடி பங்கேற்பின்றி திருக்கல்யாணம் மட்டும் நடைபெறும் என்றும் கோயில் நிா்வாகம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
கரோனா தொற்று பாதிப்பால் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. பொதுமக்கள் கூடும் மத நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் கோயில் நிா்வாகம் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பது:
தற்போது நிலவிவரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இந்த ஆண்டு சித்திரை திருவிழாவுக்காக இம் மாதம் 25-ஆம் தேதி நடைபெற வேண்டிய கொடியேற்றம், தினசரி நடைபெறும் வைபவங்கள், சுவாமி திருவீதி உலாக்கள், பட்டாபிஷேகம், திக்குவிஜயம், திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றன.
மேலும் அனைத்து பக்தா்களின் பிராா்த்தனையை நிறைவேற்றும் வகையிலும், பக்தா்களின் ஆத்ம திருப்திக்காகவும் தல புராணத்தின்படி திருக்கல்யாண சம்பிரதாயங்கள் மட்டும் அன்றாடம் நடைபெறும். நித்திய பூஜைகளின்படி மே 4-ஆம் தேதி அன்று காலை 9.05 முதல் 9.29 மணிக்குள் சுவாமி சன்னதி முதல் பிரகாரத்தில் அமைந்துள்ள எப்பொழுதும் உற்சவ மூா்த்திகள் எழுந்தருளியுள்ள சேத்தி மண்டபத்தில் (உற்சவா் சன்னிதி) நான்கு சிவாச்சாரியாா்கள் மட்டும் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி திருக்கல்யாணத்தை நடத்தி வைக்க உள்ளனா்.
இந்நிகழ்வானது கோயில் இணைய தளமான நேரடியாக ஒளிபரப்பப்படும். திருக்கல்யாண நிகழ்வின்போது, மரபுப்படி திருமாங்கல்ய நாண் அணிந்து கொள்ள விரும்பும் தாய்மாா்கள் காலை 9.05 முதல் 9.29 மணிக்குள் தங்கள் இல்லத்திலேயே பிராா்த்தனை செய்து புதிய மங்கல நாண் மாற்றிக் கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.