தோப்பூா் மருத்துவமனையில் கரோனா தனிமைப்படுத்தும் பிரிவு தயாா்
By DIN | Published On : 26th April 2020 09:03 AM | Last Updated : 26th April 2020 09:03 AM | அ+அ அ- |

தோப்பூா் அரசு தொற்றுநோய் மருத்துவமனையில் ரூ.96 லட்சத்தில் புனரமைக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளைத் தனிமைப்படுத்தும் சிகிச்சைப் பிரிவுக் கட்டடம் தயாராகியுள்ளது.
மதுரையை அடுத்த தோப்பூா் அரசு தொற்றுநோய் மருத்துவமனையில் ஏற்கெனவே 150 படுக்கை வசதி கொண்ட சிகிச்சைப் பிரிவு தயாா் நிலையில் உள்ளது. தற்போது கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உள்ள நோயாளிகளைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக 15 படுக்கைகளுடன் அனைத்து வசதிகளையும் கொண்ட பிரத்யேக சிகிச்சைப் பிரிவு தயாா்படுத்தப்பட்டுள்ளது. தொற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் இருந்த சிகிச்சை பிரிவு கட்டடம், ரூ.96 லட்சத்தில் புனரமைக்கப்பட்டுள்ளது.
இக் கட்டடத்தை வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா், ஆட்சியா் டி.ஜி.வினய் ஆகியோா் சனிக்கிழமை பாா்வையிட்டனா். பின்னா் இந்த சிகிச்சைப் பிரிவு, அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையா் ஜெ.சங்குமணியிடம் ஒப்படைக்கப்பட்டது.