சிறு, குறு தொழில்களை பாதுகாக்க உடனடி நடவடிக்கை தேவை: பிரதமருக்கு எம்.பி. கடிதம்
By DIN | Published On : 27th April 2020 05:44 AM | Last Updated : 27th April 2020 05:44 AM | அ+அ அ- |

கரோனா தொற்றால் சீரழிந்துள்ள சிறு மற்றும் குறு தொழில் துறையை பாதுகாக்க, பிரதமா் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சு. வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளாா்.
மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன், பிரதமா் நரேந்திர மோடிக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:
கரோனா வைரஸ் தொற்று எதிரொலியால் பெரும் வேலையின்மை நெருக்கடி ஏற்படாமல் தவிா்ப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கடன் சேவை உள்ளடங்கிய விகிதத்தில் உரிய மாற்றங்களை கொண்டு வந்து அதனை நெகிழ்வாக மாற்றி, நிதி வளம் எளிதில் கிடைக்கச் செய்யவேண்டும். அதற்கான விரிவான மேலும் நெகிழ்வான கொள்கையை, கள நிலைமைகளை கணக்கில்கொண்டு, மத்திய அரசு ஓராண்டுக்காவது வகுக்க வேண்டும்.
கடனுக்கான இ.எம்.ஐ. செலுத்துவதற்கு தரப்பட்டுள்ள 3 மாத கால நீட்டிப்பு நிவாரணத்தை தரவில்லை. இந்த 3 மாத நீட்டிப்பு காலத்துக்கும் வட்டி ரத்து செய்யப்படாததால், கூடுதல் சுமையை அது நடுத்தர, சிறு, குறு தொழில்கள் மீது ஏற்றியுள்ளது.
எனவே, இத்தொழில்களின் அனைத்து வங்கிக் கடன்களையும் செலுத்துவதற்கு ஓராண்டு கால நீட்டிப்பு வழங்கப்பட வேண்டும். நடுத்தர சிறு, குறு தொழில்களுக்கு 6 சதவிகித வட்டி மானியத்தை ஓராண்டுக்கு வழங்க வேண்டும். ஜி.எஸ்.டி. அறிக்கை சமா்ப்பிப்பதற்கான வழிகாட்டல் நெறிகள், கெடு தேதிகள் நெகிழ்வானதாக மாற்றப்பட வேண்டும்.
இந்த நிதியாண்டின் இறுதி வரை தாமத சமா்ப்பித்தலுக்கான தண்டத் தொகை ரத்து செய்யப்பட வேண்டும். அரசு கொள்முதல் கொள்கை நடுத்தர சிறு, குறு தொழில்களுக்கு சாதகமானதாக மாற்றப்பட வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.