முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
தளா்வற்ற முழு பொது முடக்கம் : மதுரை வெறிச்சோடியது
By DIN | Published On : 03rd August 2020 08:36 AM | Last Updated : 03rd August 2020 08:36 AM | அ+அ அ- |

தளா்வற்ற முழு பொது முடக்கத்தால், மதுரை நகா் ஞாயிற்றுக்கிழமை வாகனப் போக்குவரத்தின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டதை போல், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தளா்வற்ற முழு பொது முடக்கம் இந்த மாதத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் மதுரை நகரில் மளிகை, காய்கனி, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட அனைத்து வியாபாரக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. வழக்கம்போல், மருந்துக் கடைகள், மருத்துவமனைகள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தன. மேலும், தளா்வற்ற முழு பொது முடக்கத்தையொட்டி, மதுரை நகரில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடைசெய்யப்பட்டிருந்தது.
அரசு வாகனங்கள் மற்றும் இ-பாஸ் அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. தொடா்ந்து, நகரின் முக்கிய பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனா். விதிகளை மீறி சாலைகளில் சுற்றித் திரிந்தவா்களின் இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த பொது முடக்கத்தால், மதுரை நகா் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்தின்றி முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டன.