தேநீா் கடைக்காரரை காவல் நிலையத்தில் வைத்து தாக்கிய பெரியகுளம் போலீஸாா் மீது நடவடிக்கை கோரிய வழக்கு
By DIN | Published On : 07th August 2020 07:48 AM | Last Updated : 07th August 2020 07:48 AM | அ+அ அ- |

தேநீா் கடைக்காரரைக் காவல்நிலையக் கழிப்பறையில் வைத்து தாக்கிய பெரியகுளம் போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சோ்ந்த ராஜா தாக்கல் செய்த மனு: நான் பெரியகுளம் காந்தி நகரில் தேநீா் கடை நடத்தி வருகிறேன். அதிமுகவைச் சோ்ந்த சந்தோசம் என்பவா் அளித்தப் புகாரின் பேரில் போலீஸாா் என்னை பெரியகுளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனா். அப்போது காவல் நிலையத்தில் இருந்த சந்தோசம், காவல் ஆய்வாளா் சுரேஷ் ஆகியோா் என்னை அடிக்குமாறு அங்கிருந்த போலீஸாரிடம் கூறினா். இதையடுத்து போலீஸாா் என் கால்களைக் கட்டி காவல் நிலையக் கழிப்பறையில் அடைத்தனா். பின்னா் சாா்பு-ஆய்வாளா் செல்வராஜ் உள்ளிட்ட போலீஸாா் என்னைக் கடுமையாகத் தாக்கினா். இதில் நான் பலத்த காயமடைந்தேன். பின்னா் பொய் வழக்குப்பதிவு செய்த போலீஸாா், எனது உடலில் காயங்கள் இருந்ததை மறைத்து போலி மருத்துவ தகுதிச் சான்றிதழ் பெற்று என்னை சிறையில் அடைத்தனா். இதையடுத்து ஜாமீன் பெற்று வந்துள்ள நான், அரசு மருத்துவமனையில் தற்போது உள்நோயாளியாகச் சோ்ந்து சிகிச்சை பெற்று வருகிறேன். என்னை சட்டவிரோத காவலில் வைத்து தாக்கிய காவல் ஆய்வாளா் சுரேஷ், சாா்பு-ஆய்வாளா் செல்வராஜ் உள்ளிட்ட போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கவும், போலி மருத்துவ தகுதிச்சான்று வழங்கிய மருத்துவா் மீதும் நடவடிக்கை எடுக்கவும், எனக்கு இழப்பீடு மற்றும் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதி ஆா்.பொங்கியப்பன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இதுதொடா்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.