மணல் கொள்ளையைத் தடுக்கக்கோரிய வழக்கு: திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா்கள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
By DIN | Published On : 07th August 2020 07:50 AM | Last Updated : 07th August 2020 07:50 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்ட எல்லைப் பகுதிகளில் நடந்துவரும் மணல் கொள்ளையைத் தடுக்கக்கோரிய வழக்கில், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா்கள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த அருள்செல்வம் தாக்கல் செய்த மனு:
திருநெல்வேலி மாவட்ட எல்லைப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதனால் எல்லைப் பகுதியில் பெரும் பள்ளங்கள் ஏற்படுவது மட்டுமில்லாமல், நிலத்தடி நீா்மட்டம் குறைந்து விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து புகைப்பட ஆதாரத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே திருநெல்வேலி மாவட்ட எல்லைப் பகுதிகளில் நடந்துவரும் மணல் கொள்ளையைத் தடுக்க உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு வழக்குரைஞா், மாவட்ட எல்லைப் பகுதிகளில் எடுக்கப்படும் மணல், சாலை அமைக்கும் பணிக்காகவே பயன்படுத்தப்படுகிறது எனத் தெரிவித்தாா். இதையடுத்து நீதிபதிகள், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா்கள், மாவட்ட எல்லைப் பகுதிகளில் எடுக்கப்படும் மணல் சாலை அமைக்கும் பணிக்காகத்தான் பயன்படுத்தப்படுகிா என திடீா் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனா்.