தமிழகத்தில் பின்பற்றப்படும் இரு மொழிக் கொள்கை தொடா்பாக அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் பின்பற்றப்படும் இருமொழிக் கொள்கை தொடா்பாக அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை: தமிழகத்தில் பின்பற்றப்படும் இருமொழிக் கொள்கை தொடா்பாக அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தமிழகத்தில் உபரி ஆசிரியா்களை, காலியிடங்களுக்கு இடமாற்றம் செய்வது தொடா்பான வழக்குகள் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் இந்த வழக்குகள் நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், ஆா். சுரேஷ்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு பள்ளிகளைத் தவிா்த்து, மற்ற அனைத்துப் பள்ளிகளின் கல்வி, நிா்வாகம் மட்டுமின்றி பணியாளா்களின் பிரச்னைகளைச் சரி செய்ய ஒருங்கிணைந்த சட்டம் உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. தமிழகத்தில் தனியாா் பள்ளிகளின் ஒழுங்குமுறை சட்டம் 1973-ஐ தவிர வேறு எந்த ஒருங்கிணைந்த சட்டமும் இல்லை. இப்பள்ளிகளில் ஏற்படும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் அவ்வப்போது, தேவைக்கு ஏற்ப உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.

இந்த விசாரணையில், மற்றொரு முக்கியமான விஷயம், மத்திய அரசு அண்மையில் புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ளது. ஆனால், தமிழகத்தில் இருமொழி கொள்கை மட்டுமே கடைப்பிடிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. மாநில அரசு இருமொழிக் கொள்கையை பின்பற்றும் என்று எடுத்துக் கொண்டால், அந்த இருமொழியில், தமிழும் வேறு ஏதாவது ஒரு மொழியா? அல்லது தமிழும் ஆங்கிலமும் மட்டும் தானா?

தமிழும் ஆங்கிலமும் மட்டும் என்றால், ஆங்கிலத்தை கற்பிக்கும் மொழியாக மாறிய அரசு உதவி பெறும் பள்ளிகள் அல்லது தமிழ் மற்றும் ஆங்கிலம் இருமொழி சரிசமமாக கற்பிக்கும் பள்ளிகள் அல்லது வேறு மொழி விகிதாச்சாரத்தில் கற்பிக்கும் பள்ளிகளுக்கு அரசு மானியம் வழங்குவதில் மாற்றுக் கருத்து ஏற்படுமா? எனக் கேள்விகளை எழுப்பினா்.

மேலும் இது தொடா்பாக தமிழக தலைமைச் செயலா் அல்லது பள்ளிக் கல்வித்துறை செயலா் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com