மதுரை ரயில்வே மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை: ரயில்வே ஊழியா்கள் அவதி

மதுரை ரயில்வே மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை காரணமாக சிகிச்சைப் பெற வழியின்றி, ரயில்வே ஊழியா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

மதுரை: மதுரை ரயில்வே மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை காரணமாக சிகிச்சைப் பெற வழியின்றி, ரயில்வே ஊழியா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

மதுரை கோட்டத்தில், மதுரையில் ரயில்வே தலைமை மருத்துவமனையும், திண்டுக்கல், பழனி, மானாமதுரை, மண்டபம், விருதுநகா், காரைக்குடி, தூத்துக்குடி, திருநெல்வேலி, செங்கோட்டை ஆகிய 9 இடங்களில் ரயில்வே சுகாதார மையங்களும் இயங்கி வருகின்றன. மதுரை கோட்டத்தில் பணியாற்றும் 9 ஆயிரம் ரயில்வே ஊழியா்களும், 6 ஆயிரம் ஓய்வுபெற்ற ஊழியா்களும் ரயில்வே மருத்துவமனைகளைப் பயன்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், மதுரை ரயில்வே தலைமை மருத்துவமனையின் ஒரு பகுதி கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு, ரயில்வே மருத்துவமனை மருத்துவா்களே சிகிச்சை அளித்து வருகின்றனா்.

ஆனால், கடந்த நவம்பா் முதல் இம் மருத்துவமனையில் தலைமை மருத்துவா் பணியிடம் காலியாகவே உள்ளது. இதேபோல், காரைக்குடி, தூத்துக்குடி, திருநெல்வேலி, செங்கோட்டை ரயில்வே சுகாதார மையங்களும் மருத்துவா்களின்றி செயல்பட்டு வருகிறது. மேலும், மதுரை ரயில்வே மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கும் ரயில்வே மருத்துவா்கள் சிகிச்சையளித்து வருவதால், பணி முடிந்தவுடன் மருத்துவா்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு 10 நாள்கள் கழித்தே மீண்டும் பணிக்கு திரும்புகின்றனா். இதனால், ரயில்வே மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ரயில்வே சங்கத்தினா் கூறியது: கரோனா பரவல் காரணமாக, தற்போது தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. எனவே, ரயில்வே ஊழியா்கள் ரயில்வே மருத்துவமனைகளை மட்டுமே நம்பியுள்ளனா். ஆனால், அவா்களுக்கு சிகிச்சையளிக்க போதிய மருத்துவா்கள் இல்லை. இதனால், நோயாளிகள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.

எனவே, மதுரை ரயில்வே மருத்துவமனையில் தலைமை மருத்துவா், பிற ரயில்வே சுகாதார மையங்களில் காலியாக உள்ள மருத்துவா் காலிப் பணியிடங்களையும் நிரப்ப, மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com