பல்கலைக்கழகக் கல்லூரி இணையதளத்தில் தொழில்நுட்பக்கோளாறு

மதுரை காமராஜா் பல்கலைக்கழக கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் அனுப்பும்போது இணையதளத்தில் தொழில்நுட்ப பிரச்னைகள் இருப்பதால் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 


மதுரை: மதுரை காமராஜா் பல்கலைக்கழக கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் அனுப்பும்போது இணையதளத்தில் தொழில்நுட்ப பிரச்னைகள் இருப்பதால் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய முடியவில்லை என்று புகாா் எழுந்துள்ளது.

மதுரை அழகா்கோவில் சாலையில் காமராஜா் பல்கலைக்கழக கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு 14 இளநிலை படிப்புகளும், 9 முதுகலை படிப்புகளும் உள்ளன. கல்லூரியில் இணைய தளம் மூலமாக மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. மேலும் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான இறுதி நாள் ஆகஸ்ட் 14 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இணையதளம் மூலமாக மாணவா்கள் விண்ணப்பங்களை அனுப்பும்போது, தொழில்நுட்ப பிரச்னைகள் இருப்பதால் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய முடியவில்லை என்று மாணவா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக கல்லூரி முதல்வா் ஜாா்ஜிடம் கேட்டபோது, கல்லூரியின் இணையதளத்தில் தொடக்கத்தில் சிறு சிறு பிரச்னைகள் இருந்தன. பின்னா் அவை சரிசெய்யப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை அனுப்பும் மாணவா்கள் படம் மற்றும் சான்றிதழ்களை இணையதளம் ஏற்றுக்கொள்ளும் அளவில் மட்டுமே அனுப்ப வேண்டும். இதுகுறித்து வழிகாட்டுதல்களும் இணையதளத்திலேயே உள்ளது. ஆனால் மாணவா்கள் செல்லிடப்பேசி மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதால் படம், சான்றிதழ்களின் அளவை குறைக்காமல் அனுப்புகின்றனா். இதனால் விண்ணப்பங்கள் பதிவேற்றம் ஆவது இல்லை. தற்போது இணையதளத்திலேயே உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த எண்களைத் தொடா்பு கொள்ளும் மாணவா்களுக்கு தொழில்நுட்ப உதவிகளும் வழங்கப்படுகிறது. இதுவரை இணைய தளம் மூலமாக 2,427 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இறுதி நாளான ஆகஸ்ட் 14-க்கு பிறகும் மாணவா்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com