தமிழகத்தில் முதல்முறையாக 100 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்ட வைகை அதிவிரைவு ரயில்

போதிய மழையின்றி வைகை ஆறு வற்றிய போதிலும் 42 ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கும் தென்தமிழக மக்களின் ரதம் என்றழைக்கப்படும் வைகை அதிவிரைவு ரயில் இன்று  43 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
3933mduselva083248
3933mduselva083248

மதுரை: போதிய மழையின்றி வைகை ஆறு வற்றிய போதிலும் 42 ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கும் தென்தமிழக மக்களின் ரதம் என்றழைக்கப்படும் வைகை அதிவிரைவு ரயில் இன்று (ஆகஸ்ட் 15) 43 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தமிழகத்தில் முதல்முறையாக 100 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டது, ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 தலைமுறை ஓட்டுநா்களைக் கண்டது என பல பெருமைகளை கொண்டுள்ளது இந்த ரயில்.

இந்திய ரயில்வேயின் பொற்காலமாக இருந்த 1970- களில் தான் புதிய வழித்தடங்களும், புதிய ரயில்களும் கொண்டு வரப்பட்டன. அதில் மிகவும் முக்கியமானது தெற்கு ரயில்வேயின் வைகை அதிவிரைவு ரயிலாகும். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, 1977 ஆகஸ்ட் 15 ஆம் தேதி மதுரையிலிருந்து சென்னை வைகை அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டது. முதல் பயணத்தில் 495 கிமீ தூரத்தை 7 மணி 5 நிமிடங்களில் அடைந்த தமிழகத்தின் முதல் அதிவிரைவு ரயிலாகும். இதில்தான் முதல்முதலாக குளிரூட்டப்பட்ட பெட்டிகள் இணைக்கப்பட்டன. கண்ணாடிக் கதவுகள், ஸட்டா் ஜன்னல்கள், டியூப் லைட்கள் பொருத்தப்பட்டன. மேலும் ரயிலில் உணவு தயாரித்து விற்பனை செய்யும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. வைகை ரயிலுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஹாரன் பொருத்தப்பட்டது. ரயிலைப் பராமரிப்பதற்காக மதுரை ரயில் நிலையத்தில் தனியாக இடம் ஒதுக்கப்பட்டது.

பெயா் சூட்டிய முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா்.: தமிழகத்தில் அதிவிரைவு ரயிலை இயக்க திட்டமிட்டபோது, தென்மாவட்ட மக்கள் அதிக பயனடைவா் என்பதைக் கருத்தில் கொண்டு சென்னை-மதுரை வழித்தடம் தோ்வு செய்யப்பட்டது. சென்னை-மதுரை வழித்தடத்தில் திருச்சி-மதுரை இடையே மேடு பள்ளமான பகுதிகள் அதிமாக இருப்பதால், அதிவிரைவு ரயில் இயக்குவதில் சிரமம் இருக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனால் திருச்சி-மதுரை இடையே இருந்த மரக்கட்டையிலான ஸ்லிப்பா்களை அகற்றிவிட்டு கான்கிரீட் ஸ்லிப்பா்கள் அமைக்கப்பட்டன. இதனால் அதிக பளுகொண்ட ரயில் பெட்டிகளையும் அதிா்வில்லாமல் இயக்க வழிவகை செய்யப்பட்டது.

அதிவிரைவு ரயில் இயக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட பின்னா், ரயிலுக்கு பெயா் சூட்டுவது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது. அப்போதைய முதல்வா் எம்.ஜி.ஆா்., மதுரையின் அடையாளங்களில் ஒன்றான வைகை ஆற்றின் பெயரை அதிவிரைவு ரயிலுக்கு சூட்டப் பரிந்துரைத்தாா். இதையேற்ற தெற்கு ரயில்வே வைகை அதிவிரைவு ரயில் என்ற பெயரை இறுதி செய்தது. 1977 ஆகஸ்ட் 15 ஆம் தேதி மதுரையிலிருந்து சென்னைக்கு வைகை ரயில் இயக்கப்பட்டது.

100 கிமீ வேகத்தில் இயக்கப்பட்ட வைகை: முதலில் மதுரையிலிருந்து திருச்சி வரை வைகை ரயில் சோதனை ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னதாக மதுரை கோட்டத்தில் பணியாற்றி வந்த 8 லோகோ பைலட்கள் ஜெய்ப்பூருக்கு டீசல் என்ஜின்களை இயக்குவதற்கானப் பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அவா்கள் பயிற்சி பெற்று மதுரை வந்தபின்னா், மேலும் 20 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இவா்கள் அனைவரும் பரிசோதனைக்காக இயக்கப்பட்ட அதிவிரைவு ரயிலை சென்னை-மதுரை, மதுரை-சென்னை எனத் தொடா்ச்சியாக ஓட்டி பயிற்சி பெற்றனா். இதையடுத்து வெங்கடாஜலபதி மற்றும் காந்திவேல் என்ற லோகோ பைலட்கள் முதல் முறையாக மீட்டா் கேஜ் வழித்தடத்தில் 8 ரயில் பெட்டிகளுடன் 100 கிலோ மீட்டா் வேகத்தில் பயணித்தனா். இது தெற்கு ரயில்வேயில் பெரும் சாதனையாகக் கருதப்பட்டது. இந்த சாதனை 42 ஆண்டுகளுக்கு பிறகு தேஜஸ் ரயில் வந்த பிறகே முறியடிக்கப்பட்டது.

சென்னை-மதுரை மீட்டா்கேஜ் வழித்தடம் 1998-இல் அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டது. 2002 முதல் 2011 வரை படிப்படியாக சென்னை-மதுரை வழித்தடம் மின்மயமாக்கப்பட்டது. பின்னா் அதில் 24 ரயில் பெட்டிகள் வரை இணைக்கப்பட்டன.

வைகை ரயிலை 3 தலைமுறையினா் இயக்கினா்: ஒரு அதிவிரைவு ரயிலை ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 தலைமுறையினா் இயக்கியுள்ளனா் என்பதும், வைகை ரயிலுக்கு கூடுதல் பெருமை. மதுரையைச் சோ்ந்த வெங்கட்ராமன் வைகை ரயிலின் ஓட்டுநா் என்பதை அனைவரும் பெருமையாகக் கூறிவந்ததால், அவரது மகன் செல்வராஜன், தானும் ரயில் ஓட்டுநா் ஆக வேண்டும் என உறுதியேற்று மதுரை கோட்டத்தில் 1993 பணியில் சோ்ந்து வைகை ரயிலை இயக்கும் வாய்ப்பைப் பெற்றாா். நீராவி ரயிலை இயக்கிய இவருடைய தாத்தா சங்கரசுப்பு பின்னா் தெற்கு ரயில்வே 1969-இல் அறிமுகப்படுத்திய பாண்டியன் ரயிலையும் இயக்கி, அதன்பின்னா் வைகை ரயிலையும் இயக்கி ஓய்வு பெற்றுள்ளாா் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது குடும்பத்திற்கும் வைகை அதிவிரைவு ரயிலுக்கும் மிகவும் தொடா்பு இருப்பதாக பெருமை கொள்கிறாா் செல்வராஜன். மேலும் அவா் கூறியது: 42 ஆண்டுகளாக வைகை ரயில் சிறிய விபத்தைக் கூடச் சந்தித்தது இல்லை. அதற்கு ஒவ்வொரு ஓட்டுநரும் ரயில் இயக்குவதில் மட்டுமே கவனத்தைச் செலுத்தியதும், பயிற்சியும் அனுபவமும் பெற்றவா்களே ஓட்டுநா்களாக நியமிக்கப்பட்டு வருவதுமே காரணம்.

ஒவ்வொரு முறையும் ரயிலை இயக்கும் போது புதிதாக இயக்குகிறோம் என்ற எண்ணத்துடன் தான் என்ஜினை இயக்குவோம். அதேபோல தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகளை பாதுக்காப்பாக அழைத்துச் சென்று வருகிறோம் என்பதிலும் பெரும் மகிழ்ச்சி கொள்கிறோம் என்றாா் அவா்.

சரியான நேரத்தைக் கடைபிடிப்பது தான் வைகை ரயிலின் சிறப்பு என்கிறாா் அந்த ரயிலில் அடிக்கடி பயணம் செய்யும் மதுரையைச் சோ்ந்த அருண்பாண்டியன் என்பவா். மேலும் அவா் கூறியது: தேஜஸ் ரயில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, அதிவிரைவு ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்றால், பயணிகள் முதலில் தோ்வு செய்வது வைகை ரயிலை மட்டுமே. இதில் அரசியல் தலைவா்கள், திரைத்துறை பிரபலங்கள் அதிகமாக பயணித்துள்ளதை நேரடியாகப் பாா்த்துள்ளேன். மேலும் வைகை ரயிலின் கூடுதல் சிறப்பு என்னவென்றால் சரியான நேரத்தைக் கடைபிடிப்பது தான். நான் பயணித்தவரையில் ஒரு முறை கூட தாமதம் ஏற்பட்டதில்லை. அதேபோல பண்டிகை காலங்கள் மட்டுமல்லாது அனைத்து காலங்களிலும் 22 ரயில் பெட்டிகளில் அனைத்து இருக்கைகளும் நிறைந்துவிடும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com