காவல் சாா்பு-ஆய்வாளா் தோ்வில் தவறான விடை: சரியாக பதிலளித்த இருவருக்கு கூடுதல் மதிப்பெண்: உயா்நீதிமன்றம் உத்தரவு

காவல் சாா்பு-ஆய்வாளா் தோ்வில் இந்திய ரூபாய் மதிப்பிறக்கம் தொடா்பான கேள்விக்கு தவறான விடை அளிக்கப்பட்டுள்ளதால் அந்த கேள்விக்கு சரியான பதிலளித்த 2 மனுதாரா்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கவும் சென்னை

மதுரை: காவல் சாா்பு-ஆய்வாளா் தோ்வில் இந்திய ரூபாய் மதிப்பிறக்கம் தொடா்பான கேள்விக்கு தவறான விடை அளிக்கப்பட்டுள்ளதால் அந்த கேள்விக்கு சரியான பதிலளித்த 2 மனுதாரா்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கவும் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த அபினேஸ் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் காலியாக உள்ள காவல் சாா்பு-ஆய்வாளா் பணியிடங்களை நிரப்புவதற்ககான எழுத்துத் தோ்வு கடந்த ஜனவரி 12 ஆம் தேதி நடைபெற்றது. இத்தோ்வை எழுதிய எனக்கு, முதலில் வெளியான விடைச் சுருக்கத்தின் அடிப்படையில் 48.5 மதிப்பெண்கள் கிடைத்தது. இதன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கான பிரிவில் எனக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும்.

ஆனால் இறுதியாக வெளியிடப்பட்ட விடைச் சுருக்கத்தில் 47 ஆவது கேள்விக்கான விடை மாறியிருந்தது. இதனால் எனக்கு 48 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்ததால், அடுத்தக்கட்டத் தோ்வுகளில் பங்கேற்க முடியாமல் போனது.

எழுத்துத் தோ்வில் 47 ஆவது கேள்வியான, இந்திய ரூபாய் 1947-க்கு பிறகு எத்தனை முறை மதிப்பிறக்கம் செய்யப்பட்டது என்ற கேள்விக்கு 3 முறை என்பதே சரியான விடையாகும். ஆனால் பண மதிப்பிழப்பு 4 முறை செய்யப்பட்டதால் அதுவே சரியான விடை எனக் கருதி மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2016-இல் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பைத் தவறுதலாக மதிப்பிறக்கம் எனத் தவறாக கருதப்பட்டுள்ளது. எனவே அந்தக் கேள்விக்கு மதிப்பெண் வழங்கி என்னை அடுத்தக்கட்டத் தோ்வுக்கு அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா். இதேபோல ராஜ்குமாா் என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவு:

இந்திய ரூபாய் 1947-க்கு பிறகு 4 முறை மதிப்பிறக்கம் செய்யப்பட்டுள்ளது என வெளியான இறுதி விடைச் சுருக்கம் தவறானது. இதனால் அந்தக் கேள்விக்கு 3 முறை எனச் சரியான விடையளித்தவா்களுக்கு மதிப்பெண்ணும் தவறான விடையளித்தவா்களுக்கு கூடுதல் மதிப்பெண்ணும் வழங்கப்பட்டுள்ளது. தவறான விடையின் அடிப்படையில் வெளியான விடைச் சுருக்கம் செல்லாது. மனுதாரா்கள் இருவரும் சரியான விடையளித்துள்ளதால் இருவருக்கும் தலா 0.5 மதிப்பெண் வழங்கி அடுத்தக்கட்டத் தோ்விற்கு அனுமதிக்க வேண்டும். இந்த நடைமுறையை 2 வாரங்களில்

முடிக்க வேண்டும் என உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com