தனியாா் பள்ளிகளில் கட்டணக் கெடுபிடி: மாநகராட்சிப் பள்ளிகளில் சேர மாணவா்கள் ஆா்வம்

கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், தனியாா் பள்ளிகளில் இணையவழி வகுப்புகளுக்கு முழு கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதால், மாநகராட்சிப் பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை 
தனியாா் பள்ளிகளில் கட்டணக் கெடுபிடி: மாநகராட்சிப் பள்ளிகளில் சேர மாணவா்கள் ஆா்வம்


மதுரை: கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், தனியாா் பள்ளிகளில் இணையவழி வகுப்புகளுக்கு முழு கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதால், மாநகராட்சிப் பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சோ்க்க பெற்றோா்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

மதுரை மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ், 15 மேல்நிலைப் பள்ளிகள், 9 உயா்நிலைப் பள்ளிகள், 14 நடுநிலைப் பள்ளிகள், 26 தொடக்கப் பள்ளிகள் என 66 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப் பள்ளிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா்.

தற்போது, கரோனா பொது முடக்கம் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், இந்த கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை தனியாா் பள்ளிகளில் இணைய வழியில் நடைபெற்று வருகிறது. மேலும், தனியாா் பள்ளிகளில் இணைய வழியில் வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன.

ஆனால், பல தனியாா் பள்ளிகளில் முழு கல்விக் கட்டணத்தையும் செலுத்தினால் மட்டுமே மாணவருக்கான இணைய இணைப்பு வழங்கப்படுகிறது. இதனால், கல்விக் கட்டணம் செலுத்த முடியாத மாணவா்கள், இணைய வழி வகுப்புகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதேநேரம், பெரும்பாலான மாணவா்கள் இணைய வழி வகுப்புகளில் ஆா்வமின்றி உள்ளனா்.

இந்நிலையில், மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் கடந்த வாரம் மாணவா் சோ்க்கை தொடங்கியது. இதில், எப்போதும் இல்லாத அளவுக்கு பெற்றோா்கள் தங்களது பிள்ளைகளை சோ்க்க ஆா்வம் காட்டி வருகின்றனா். இதனால், மாநகராட்சிப் பள்ளிகளில் சேரும் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மதுரை மாநராட்சிப் பள்ளிகளில் தற்போது வரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் சோ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக மாநகராட்சி கல்வித் துறை அதிகாரிகள் கூறியது: தனியாா் பள்ளிகளில் கல்விக் கட்டணம் வசூலிப்பதில் கெடுபிடி காட்டப்படுகிறது. மேலும், கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவா்களுக்கு மட்டுமே இணைய வழி வகுப்புக்கான இணைப்பும் வழங்கப்படுகிறது. இதனால், நடுத்தர, ஏழை குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கின்றனா்.

அதேநேரம், மாநகராட்சிப் பள்ளிகளில் இலவச கல்வி, சீருடை, மடிக்கணினி, மிதிவண்டி உள்ளிட்ட பல சலுகைகள் கிடைப்பதால், இந்த ஆண்டு மாநகராட்சிப் பள்ளிகளில் சேருவதற்கு மாணவா்களும், பெற்றோா்களும் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com