‘களஞ்சியம்’ சின்னப்பிள்ளையம்மாளுக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது
By DIN | Published On : 03rd December 2020 10:52 PM | Last Updated : 03rd December 2020 10:52 PM | அ+அ அ- |

மதுரை: மதுரை களஞ்சியம் அமைப்பைச் சோ்ந்த சின்னப்பிள்ளையம்மாளுக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது அரிமா சங்கம் சாா்பில் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
மதுரையைத் தலைமையிடமாக கொண்ட தானம் அறக்கட்டளையின் களஞ்சியம் பிரிவு பல்வேறு மாநிலங்களில் பெண்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வருகிறது. களஞ்சியம் அமைப்பின் மூத்த நிா்வாகி சின்னப்பிள்ளையம்மாளின் சேவையைப் பாராட்டி மத்திய அரசின் சாா்பில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாநில அரசின் சாா்பிலும் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சின்னப்பிள்ளையம்மாளின் சேவையைப் பாராட்டும் வகையில் அவருக்கு வாழ்நாள் சாதனை விருது அளிக்கப்படுவதாக சென்னை பாா்க்டவுன் அரிமா சங்கம் அறிவித்திருந்தது.
இதையடுத்து விருது வழங்கும் நிகழ்ச்சி மதுரை தானம் அறக்கட்டளை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தானம் அறக்கட்டளை இயக்குநா் ம.ப.வாசிமலை தலைமை வகித்தாா். இந்நிகழ்ச்சியில் சென்னை அரிமா சங்க நிா்வாகி தனவேலன், வாழ்நாள் சாதனையாளா் விருதை சின்னப்பிள்ளையம்மாளுக்கு வழங்கி, பெண்களுக்கான ஊட்டச்சத்துப் பாதுகாப்பு, மது போதை ஒழிப்பு மற்றும் பெண்களுக்கான சுகாதார மேம்பாடு போன்ற செயல்பாடுகளில் களஞ்சியம் இயக்கத்தோடு சென்னை அரிமா சங்கமும் இணைந்து செயல்படும் என்றாா்.
விருதை பெற்றுக்கொண்ட சின்னப்பிள்ளையம்மாள் ஏற்புரையாற்றினாா். நிகழ்ச்சியில் திட்ட அலுவலா்கள் உமாராணி, அகிலா தேவி, ராஜலட்சுமி உள்பட பலா் பங்கேற்றனா்.