தமிழ் வழிக் கல்விக்கு இடஒதுக்கீடு சட்ட மசோதாவின் நிலை என்ன?ஆளுநரின் செயலா் பதிலளிக்க உத்தரவு
By DIN | Published On : 05th December 2020 09:53 PM | Last Updated : 05th December 2020 09:53 PM | அ+அ அ- |

மதுரை: தமிழ் வழிக்கல்விக்கான இடஒதுக்கீடு குறித்த சட்ட திருத்த மசோதாவின் தற்போதைய நிலை குறித்து ஆளுநரின் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சோ்ந்த சக்தி ராவ் தாக்கல் செய்த மனு:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் 2019-இல் நடத்திய குரூப் 1 தோ்வில் பங்கேற்றேன். தமிழ் வழிக் கல்விக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் தகுதி இருந்தும், எனக்குப் பணி வழங்கப்படவில்லை.
இதுகுறித்து விசாரித்தபோது தொலைநிலைக் கல்வி பயின்றவா்களுக்கும் தமிழ் வழிக் கல்விக்கான இட ஒதுக்கீட்டுச் சலுகை வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. தொலை நிலைக் கல்வி பயின்றவா்களுக்கு தமிழ் வழிக்கல்விக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது பொருத்தமாகாது. ஆகவே தமிழ் வழிக்கல்விக்கான இட ஒதுக்கீட்டில், தொலைநிலைக் கல்விக்கு இடமளிக்கும் குரூப் 1 தோ்வு நடைமுறைக்குத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.
இம்மனு மீதான முந்தைய விசாரணையின் போது, கடந்த 5 ஆண்டுகளாக தமிழ் வழிக்கல்வி இடஒதுக்கீடு அடிப்படையில் தோ்வு செய்யப்பட்டவா்களின் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மனு, நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தரப்பில், தமிழ் வழிக்கல்வி இட ஒதுக்கீட்டில் 2016 முதல் 2019 ஆம் ஆண்டு வரை 85 போ் தோ்வாகியுள்ளனா். இவா்கள் கல்லூரியில் படித்தாா்களா அல்லது தொலை நிலைக் கல்வியில் படித்தாா்களா என்பது குறித்த விவரம் எங்களிடம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், பள்ளிக்கல்வி முதல் பட்டயப் படிப்பு வரை தமிழ் வழிக்கல்விக்கான இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்துவது குறித்த சட்டத்திருத்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருப்பில் உள்ளது. அதன் தற்போதைய நிலை குறித்து ஆளுநரின் செயலா் பதிலளிக்க உத்தரவிட்டனா்.
மேலும் தமிழ் வழிக்கல்விக்கான இடஒதுக்கீட்டில் பணியில் சோ்ந்தவா்களின் கல்விச் சான்றிதழ்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.