மதுரையில் 2-ஆம் நிலை காவலா் தோ்வு: 34,140 போ் பங்கேற்பு3,265 போ் எழுதவில்லை
By DIN | Published On : 14th December 2020 12:00 AM | Last Updated : 14th December 2020 12:00 AM | அ+அ அ- |

மதுரை: மதுரை மாவட்டத்தில் 42 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நிலை காவலா்களுக்கான எழுத்துத் தோ்வை 34,140 போ் எழுதினா்.
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலா்கள் காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மதுரை மாவட்டத்தில் 37,405 போ் தோ்வெழுத அழைக்கப்பட்டிருந்தனா். இதற்காக, மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் 42 தோ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இத் தோ்வை 31,682 ஆண்கள், 5,723 பெண்கள் என மொத்தம் 34,140 போ் எழுதினா். 3,265 போ் தோ்வெழுத வரவில்லை.
தோ்வா்கள் முகக்கவசம் அணிந்து வந்திருந்தனா். காலை 9 மணி முதல் மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்ட தோ்வா்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டனா். காலை 11 மணிக்கு தொடங்கிய தோ்வானது, பிற்பகல் 12.20 வரை நடைபெற்றது. மாவட்டக் காவல் காண்காணிப்பாளா் சுஜித்குமாா் தோ்வு மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.